தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள்.. சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Aug 15, 2024,03:29 PM IST

சென்னை: ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவுகளை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய மெடிக்கல் ஷாப்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று காலை நடந்த 78வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பிண்னர் அவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் முக்கியமாக பார்க்கப்படுவது முதல்வர் மருந்தகம் ஆகும்.


ஏழை எளிய மக்கள் தங்களது மருத்துவத்திற்காக அதிக அளவில் செலவிட நேரிடுகிறது. பல மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் அந்த செலவுச் சுமையைத் தாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு அதிகம் தேவைப்படும் ஜெனரிக் மருந்துகளை குறைந்த விலையில் தருவதற்காக தமிழ்நாடு முழுவதும் வரும் பொங்கல் தினம் முதல் முதல்வர் மருந்தகம் என்ற மலிவு விலை மருந்தகம் தொடங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.




முதல்வர் மருந்தகம் திட்டத்தை அரசு வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திடும் மருந்தாளுனர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடல் உதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.


இதேபோல, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார். இது அரசு வேலைக்காக  காத்திருக்கும் பலருக்கும் சந்தோஷ செய்தியாக வந்து சேர்ந்துள்ளது.


அதேபோல முதல்வர் அறிவித்த இன்னொரு  முக்கியத் திட்டம் முதல்வரின் காக்கும் கரங்கள். ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.  அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் மூன்று விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு




விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் 20,000 ரூபாயிலிருந்து 21,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி, விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய் 11 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.


வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர், முத்துராமலிங்கர் விஜய் ரகுநாத சேதுபதி, வஉ சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியமான பத்தாயிரம் ரூபாய் இனி 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.


 இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் தனது உரையின்போது முதல்வர் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகள் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலைநிலை நிலப்பகுதிகள் அதிகம் உள்ளது.அங்கு பெருமழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளை குறித்து முறையான ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.


வனத்துறை புவிசார அறிவியல் துறை வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சி துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவினால் அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு மாநில பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பகுதிகள் மேற்கொள்ளப்படும்.


எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவிப்பதற்கு தவிர்ப்பதற்கும் தணிப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் ஆபத்துகளை குறிப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த குழு ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை வழங்கும்.அந்த பரிந்துரைகளின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அறிவித்தார்.