"மண்டல் நாயகன்" வி.பி. சிங்குக்கு சென்னையில் சிலை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Apr 20, 2023,12:39 PM IST
சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த விஸ்வநாத் பிரதாப் சிங்குக்கு (வி.பி.சிங்) சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த வி.பி.சிங் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி நாடு முழுவதும் சமுதாயப் புரட்சியைச் செய்தவர். இந்த பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது என்று வட மாநிலங்களில் நடந்த மிகப் பெரிய கலவரங்கள், போராட்டங்களுக்கு அடி பணியவில்லை. இதனால் தனது ஆட்சியையும் இழக்கத் துணிந்தவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளால்தான் நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கையில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. உயர் பதவிகளில் குறிப்பிட்ட சமூகத்தினரே அதிகம் இருந்த வந்த நிலை மாறி அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வழி ஏற்பட்டது.
ஒரு வருடம் கூட அவரால் பிரதமர் பதவியில் நீடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் பதவியில் இருந்த 11 மாதங்களில் சமூக நீதியைக் காக்க அவர் செய்த புரட்சி மிகப் பெரியது. வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்களின் மனங்களில் வியாபித்து நிறைந்து நிற்கும் ஒரு அருமையான தலைவர் ஆவார். அவருக்கு தமிழ்நாட்��ில் சிலை அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டின் பெரியார் அவருக்கு மிகவும் பிடித்த தலைவர். அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அதேபோல மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிப் பழகியவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் கொடுத்த 27 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையில் மிகப் பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தியது.