அந்தப் பக்கம் விஜயகாந்த் மகன்.. இந்தப் பக்கம் ராதிகா.. நீயா நானா?.. சுவாரஸ்ய சிக்கலில் விருதுநகர்!

Manjula Devi
Mar 23, 2024,04:35 PM IST

சென்னை: விஜயகாந்திற்கு ஜோடியாக பல படங்களில் நடித்த வெற்றி நடிகை ராதிகாவும், விஜயகாந்த் மகனும் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பெரும் சுவாரஸ்யத்தையும், எதிர்பார்ப்புகளையம் ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ஜோடி நடித்தால் படம் மிகவும் நன்றாக இருக்கும். அனைவரும் ரசிக்கும் வகையில் அமையும் என நினைப்பவர்கள் ஏராளம். அந்த வகையில் 90களில் ராதிகா மற்றும் விஜயகாந்த் நடித்த படங்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இவர்களுடைய நடிப்பு, நடனம், கெமிஸ்ட்ரி இவையெல்லாம் சொல்ல வார்த்தைகள் இல்லை. 




இவர்களின் நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. சேர்ந்து நடித்தால் படம் சூப்பர் ஹிட்டடிக்கும். அப்படி ஒரு அருமையான ஜோடி இது. அப்படி இருவரும் இணைந்து 13 படங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக நானே ராஜா நானே மந்திரி, சிறை பறவை, வீரபாண்டியன், உழவன் மகன், தெற்கத்திக் கள்ளன், நீதியின் மறுபக்கம், பூந்தோட்ட காவல்காரன், தர்ம தேவதை, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர்கள். 


இவர்கள் இணைந்து நடித்த படங்களை பார்ப்பதற்கென்றே ரசிகர் கூட்டம் அதிகம். இந்த நிலையில் ஒரு உச்ச நடிகராகவும், ஒரு உச்ச நடிகையாகவும், வலம் வந்த இவர்கள் ஜோடியாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்  என்றே சொல்லலாம். விஜயகாந்த்தின் ஹேர்ஸ்டைலை மாற்றியவரே ராதிகாதான். அந்த ஹேர்ஸ்டைல் மாற்றத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் ஹீரோக்களில் ஒருவராக மாறினார் விஜயகாந்த்.


கேப்டன் விஜய்காந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தது மட்டுமல்லாமல் அரசியலிலும் சிறந்த தலைவராக செயல்பட்டவர். இவர் இறப்பிற்கு திரண்ட கூட்டமே அதற்கு சாட்சி. இந்த நிலையில் விஜயகாந்தும், ராதிகாவும் இணைந்து நடித்த ஒரு காலம் இருக்க.. இன்று விஜயகாந்தின்  மகனும், ராதிகாவும் ஒரே தொகுதியில் போட்டியிடுகின்றனர். 




விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேதான் விஜயகாந்த்தின் பூர்வீக ஊர் உள்ளது. இந்தப் பகுதி விருதுநகர் லோக்சபா தொகுதிக்குள் வருகிறது.  சரத்குமாருக்கு செல்வாக்கு உள்ள பகுதி விருதுநகர். அவர் சார்ந்த நாடார் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதி. இதனால்தான் அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகரில் சீட் கொடுத்துள்ளது பாஜக.


இப்படி இருவரும் இணைந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவது மக்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. யாருக்கு ஆதரவு கொடுப்பது விஜயகாந்த் மகனுக்கா..  ராதிகாவுக்கா.. என்ற சுவாரஸ்யான குழப்பம் மக்களிடையே நிலவி வருகிறது.