கிரிக்கெட்டுக்கு அடுத்து.. தமிழ் சினிமாதான் இலங்கையில் ரொம்ப பாப்புலர்.. முரளிதரன்

Su.tha Arivalagan
Dec 02, 2023,10:05 AM IST

கொழும்பு: இலங்கையைப் பொறுத்தவரை கிரிக்கெட்தான் மிகப் பெரிய பொழுதுபோக்கு. அதற்கு அடுத்து சினிமாதான். குறிப்பாக, தமிழ், இந்திப் படங்கள் அங்கு மிகப் பிரபலம் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன்.


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவரது காலத்தில் மிகப் பிரபலமான வீரராக வலம் வந்தவர். சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீரராக பல காலம் திகழ்ந்தவரும் கூட. இவர் ஒரு போட்டியில் விளையாடுகிறார் என்றால் இவரது பந்து வீச்சைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூடுவார்கள்.


ஆஸ்திரேலியாவின் மறைந்த ஷான் வார்னேவுக்கும், முரளிதரனுக்கும் இடையே நிலவிய, விக்கெட் வீழ்த்துவதில் காணப்பட்ட போட்டா போட்டி படு சுவாரஸ்யமானது.  இருவருமே மிகப் பெரிய ஜாம்பவான்கள். சமீபத்தில் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டது.. இப்படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் நடிக்கவில்லை.




இந்த நிலையில் பிடிஐக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறியுள்ளார் முரளிதரன். இலங்கையைப் பொறுத்தவரை கிரிக்கெட்தான் முதல் பிரதான பொழுது போக்கு. அதற்கு அடுத்து பார்த்தால் சினிமாதான். தமிழ், இந்தி சினிமாப் படங்கள் அங்கு நல்ல வரவேற்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளார் முரளிதரன்.


சமீபத்தில் தான் ஜெயிலர், லியோ படங்களைப் பார்த்து ரசித்ததாகவும், இந்தியில் ஜவான், டைகர் 3 படங்களைப் பார்த்ததாகவும் கூறினார் முரளிதரன்.


"இலங்கையில் தயாரிக்கப்படும் படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுபவை அல்ல. சின்ன பட்ஜெட்தான். இருப்பினும் தாய்மொழிப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள். எனவே சின்னப் படங்களும் கூட தியேட்டர்களில் நன்றாக ஓடும். அடுத்து பார்ததால், இந்தி, தமிழ் சினிமாவுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் முரளிதரன்.