Merry Christmas..Happy Christmas.. உலகம் முழுவதும்.. கிறிஸ்துமஸ் விழா.. உற்சாக கொண்டாட்டம்!

Manjula Devi
Dec 25, 2023,11:46 AM IST

டெல்லி: உலகம் முழுவதும்  கிறிஸ்துமஸ் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.  கிறிஸ்தவ பேராலயங்களில் இதையொட்டி சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன.


கிறிஸ்தவ மக்களும், அவர்களுக்கு மற்ற மதத்தினரும் Merry Christmas என்று கூறி தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.


இயேசு கிறிஸ்து அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில் அமைத்து வீடுகள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து சிறப்பாக கொண்டாடுவர். அன்றைய தினம் பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். 




உலகப் புகழ்பெற்ற வாடிகன் நகரில் போப்பாண்டவர் பிரான்சிஸ் தலைமையில், கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது. இங்குள்ள புனித பீட்டர் பசிலிக்காவில், குழந்தை இயேசுவின் உருவம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். 


இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஹோலி ரோசரி தேவாலயத்தில் இன்று கிறிஸ்துமஸ் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் முதல்வர் மம்தா பானர்ஜி  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.


கேரளாவில் உள்ள மலபார் கடற்கரையில் செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் 2000 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இங்குள்ள கிறிஸ்தவர்கள் தேவாலயம் வந்து சிறப்பு  பிரார்த்தனையில் ஈடுபட்டு தங்கள் மகிழ்ச்சிகளை தெரிவித்து வருகின்றனர்.


தமிழ்நாட்டிலும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சமீபத்தில் பெய்த கன மழை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


வேளாங்கண்ணி தூய மரியன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மத மக்களும் கலந்து கொண்டு தங்களின் நேர்த்திகடன்களை செலுத்துவது வழக்கம். இங்கு வண்ண வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வேளாங்கண்ணி நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் இயேசு பிறப்பை காண ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல, ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக  குவிந்துள்ளனர். இங்கு நடைபெறும் சிறப்பு திருப்பலிகளில் கலந்து கொண்டும் வருகின்றனர்.


சென்னை சாந்தோம் தேவாலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தேவாலயம் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு ஜொலி ஜொலித்துக் காணப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மனம் நிறைய  மகிழ்ச்சியுடன் இங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையிலும் வழக்கம் போல் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகரமே ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்தனர். இந்த நிலையிலிருந்து  கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர்.  தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயம் மிகவும் புகழ் பெற்றது. இங்கு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகளை  மேற்கொள்வர். 


இந்த ஆண்டும் சிறப்புக் குடிலில் இயேசு பிறப்பு காட்சியை தத்ரூபமாக வைத்திருந்தனர். வெள்ளப் பாதிப்பால் ஏற்பட்ட துயரத்தையும் மீறி, அதிலிருந்து மீண்டு, இந்த காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.  


கன்னியாகுமரி மாவட்டத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள  அனைத்து சர்ச்சுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கிறிஸ்தவர்கள் பலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு ,செண்டை மேளம் முழங்க, ஆடிப் பாடியபடி நகர் முழுவதும் ஊர்வலம் சென்றனர். இதனைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் கன்னியாகுமரி மாநகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.


உலகமும் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு மனமார்ந்த கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகள்..!!