1200வது போட்டியில்.. கும்முன்னு கோல் போட்ட.. கிறிஸ்டியானோ ரொனால்டோ.. சிறப்பு!!
ரியாத்: சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் போட்டியில் அட்டகாசமான கோல் அடித்து அசத்தியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டா. இதில் என்ன சிறப்பு இருக்குன்னு கேக்கறீங்கதானே.. இது அவரோட 1200வது கால்பந்துப் போட்டியாகும்.
ஒரு கோல் அடித்தது மட்டுமல்லாமல், சக வீரர் கோலடிக்கவும் உதவினார் ரொனால்டோ. சவூதி அரேபியாவின் புரோ லீக் கால்பந்துப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்றுள்ள அல் நாசர் கிளப்புக்கும், அல் ரியாத் கிளப்புக்கும் இடையிலான போட்டி மிக மிக விறுவிறுப்பாக இருந்தது.
இந்தப் போட்டியானது ரொனால்டோவின் 1200வது தொழில்முறைப் போட்டியாகும். இப்போட்டியில் முழு ஆட்டத்திலும் அவர் அட்டகாசமாக செயல்பட்டார். மொத்தப் போட்டியையும் அவர் நீண்ட நாட்களுக்கு நினைவு கூறும் வகையில் அட்டகாசமாக ஆடினார். 38 வயதான ரொனால்டோ, இந்த சீசனில் தனது 16வது கோலை இப்போட்டியில் போட்டார். சாதியோ மானேவிடமிருந்து வந்த பந்தை வாங்கி கோலடித்தார் ரொனால்டோ. அதேபோல ஓடாவியோ ஒரு கோல் போடவும் உதவினார்.
உலக அளவில் அதிக அளவிலான தொழில்முறைப் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனை இங்கிலாந்து முன்னாள் கோல்கீப்பர் பீட்டர் ஷில்டனிடம் உள்ளது. அவர் 1387 தொழில்முறைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் ரொனால்டோ ஒரு சாதனை படைத்தார். அதாவது 200 சர்வதேசப் போட்டிகளில் ஆடிய முதல் கால்பந்து வீரர் என்ற சாதனைதான் அது.
அதேபோல கடந்த 2022ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக ஆடியபோது ஆடவர் கால்பந்து வரலாற்றில் தொழில்முறைப் போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரொனால்டோ. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் அவர் சவூதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக ஆடி வருகிறார்.
நடப்புத் தொடரில் அல் நாசர் அணி புள்ளிகள் வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. அல் ஹிலால் அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.