வாம்மா புதுப் பொண்ணு.. வயசு 25 ஆ.. இந்தா பிடி ரூ. 11,000 பரிசு.. எங்க தெரியுமா?
Aug 31, 2023,08:44 AM IST
ஹாங்காங்: சீனாவில் மணப்பெண்ணுக்கு 25 அல்லது அதற்குக் குறைந்த வயது இருந்தால் ரூ. 11,000 பரிசாக அளிக்கப்படுகிறதாம்.
கிழக்கு சீனாவில் உள்ள சங்ஷான் என்ற ஊரில்தான் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பான அறிவிக்கையும் அந்த நகர நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இளம் வயதுத் திருமணங்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த பரிசுத் தொகையை அறிவித்துள்ளனராம்.
பிரசவத்தின்போது ஏற்படும் மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சீன அரசு கவலை அடைந்துள்ளது. பிரசவ சமயத்தில் ஏற்படும் இறப்பு விகிதங்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அது ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் சங்ஷான் நகர நிர்வாகம் இளம் வயதுத் திருமணங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பெண்கள் 25 வயதில் திருமணம் செய்வதன் மூலம் பிரசவ கால பிரச்சினைகளை வெகுவாக குறைக்கலாம் என்று அந்த நிர்வாகம் பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் இளம் வயதுத் திருமணங்களை ஊக்குவிப்பதற்காக பெண்ணுக்கு 25 அல்லது அதற்குக் கீழ் இருந்தால் பரிசு வழங்கும் திட்டத்தையும் அது நடைமுறைப்படுத்துகிறது.
இதுதவிர மேலும் பல்வேறு சலுகைகளையும் அந்த நகர நிர்வாகம் அறிவித்து வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக சீனாவில் பிறப்பு விகிதம் அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் தற்போது அது குறையத் தொடங்கியுள்ளது. இதனால் சீன அரசு கவலை அடைந்துள்ளது. மேலும் சீனாவில் முதியோர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளன.
சீனாவில் ஆண்களுக்கான திருமண வயது 22 ஆகும். பெண்களுக்கு 22 வயதில் திருமணம் செய்யலாம். இருப்பினும் இளம் வயதுத் திருமணங்கள் அங்கு குறைவாகவே உள்ளன. 30 வயது கடந்து திருமணம் செய்வோர் அதிகம். இதனால்தான் பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்களும் அங்கு அதிகமாக உள்ளன.