காசைக் கொண்டு போய் விமான என்ஜினில் போட்ட பயணி.. 4 மணி நேரம் போராடி வெளியே எடுத்த ஊழியர்கள்!

Su.tha Arivalagan
Mar 09, 2024,08:09 PM IST

பெய்ஜிங்: சீனாவில் பயணி ஒருவர் மூட நம்பிக்கை காரணமாக சில்லறை நாணயங்களை விமான என்ஜில் போட்டார். என்ஜினில் விழுந்த காசை 4 மணி நேரம் போராடி எடுத்துள்ளனர் ஊழியர்கள். இதனால் விமானம் புறப்பட பல மணி நேரம் தாமதமானாதால் பயணிகள் கடும் அவஸ்தைக்குள்ளானார்கள்.


சீனாவில் உள்ள சான்யா நகரிலிருந்து தலைநகர் பெய்ஜிங்குக்கு மார்ச் 6ம் தேதி தெற்கு சீன ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது பயணி ஒருவர் தனது கையில் காசை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.  பின்னர் கையில் இருந்த காசை என்ஜினில் போட்டு விட்டார். காசு விழுந்ததும் அவர் கமுக்கமாக இருந்துள்ளார். 




இந்த நிலையில், விமானம் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சினை ஏற்படவே, ஊழியர்கள் என்ன பிரச்சினை என்று ஆராய்ந்துள்ளனர். அப்போதுதான் என்ஜினுக்குள் ஏதோ சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிக்கிய பொருளை எடுக்கும் முயற்சியில் ஊழியர்கள் இறங்கினர். பல மணி நேரம் போராடியதில்  என்ஜினுக்குள் நாணயம் சிக்கியிருந்தது தெரிய வந்து அதை வெளியே எடுத்தனர்.


விமான பயணிகளிடம் விசாரித்தபோது,  காசு வைத்திருந்த பயணி தான்தான் போட்டதாக ஒப்புக் கொண்டார்.  அவர் வேண்டும் என்றேதான் போட்டுள்ளார். அதாவது இப்படி என்ஜினில் காசு போட்டால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூட நம்பிக்கையால் காசு போட்டாராம் அவர். அவரது முட்டாள்தனத்தால் விமான பயணிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியானதோடு, பெரும் அசவுகரியமும் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளை விமானம் ஓடிக் கொண்டிருக்கும்போது இப்படிச் செய்யாமல் விட்டார் இந்த நபர். இல்லாவிட்டால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்.


கையில் நிறைய காசு வைத்திருந்தாராம் அவர். நாலைந்து காசை போட்டதாகவும் கூறியுள்ளார். எத்தனை காசு என்ஜினில் சிக்கியிருந்தது என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, விபரீதமான செயல்களில் ஈடுபடுவதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று தெற்கு சீனா ஏர்லைன்ஸ் பயணிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.


சீனாவில் இப்படி என்ஜினுக்குள் காசு போடும் சம்பவம் இதற்கு முன்பும் கூட நடந்துள்ளது. 2021ம் ஆண்டு இப்படித்தான் ஒரு பயணி காசைப் போட்டு பிரச்சினையை ஏற்படுத்தினார். பேப்பரில் காசைச் சுற்றி என்ஜினுக்குள் அவர் போட்டு விட்டார்.  நல்லவேளையாக முன்கூட்டியே விமான ஊழியர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் அப்போது தவிர்க்கப்பட்டது.