இந்தியா மட்டுமல்ல.. பூட்டானுக்குள்ளும் புகுந்து ஆட்டையைப் போடும் சீனா.. ராஜா வீட்டு நிலமும் போச்சு

Su.tha Arivalagan
Jan 07, 2024,01:27 PM IST

திம்பு: சீனாவின் நில அபகரிப்பு அகோரப் பசியாக மாறி வருகிறது. இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் பல இடங்களில் அது ஆக்கிரமித்துள்ள நிலையில் இப்போது பூட்டானுக்குள்ளும் புகுந்து தாறுமாறாக நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. சமீபத்திய செயற்கைக் கோள் படங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.


ஒரு மாதத்திற்குள் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்கள் இவை. பூட்டானின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயுல் கெம்பஜோங் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆற்றையொட்டி பல ஊர்களில் நிலங்களை அபகரித்து ஆக்கிரமித்துள்ளது சீனா.  பூட்டானின் வட கிழக்கில் ஆக்கிரமிப்பட்டுள்ள இந்த இடங்களில் கட்டடங்களையும் அது கட்டி வருகிறது. இங்கு குடியிருப்புகளை அமைக்கும் திட்டத்தில் உள்ளது சீனா.




வெறும் 8 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிக மிக குட்டி நாடுதான் பூட்டான். இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இந்த நாடு தனித்துவமான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்ட நாடாகும். சீனாதான் இதன் மிகப் பெரிய அண்டை நாடாகும். இந்தியா மறுபக்கம் இன்னொரு பெரிய நாடு. இந்த நாட்டின் வடக்கு, மேற்கு, தென் மேற்கு என எல்லாப் பக்கத்திலும் சரமாரியான ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது சீனா. இதை பூட்டானால் தடுக்க முடியவில்லை. 


மிகவும் திட்டமிட்டு இந்த ஆக்கிரமிப்புகளை நடத்தி வருகிறது சீனா. ஆக்கிரமிக்கும் இடங்களில் மக்களை குடியேற்றியும் வருகிறது.  பூட்டானால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் மிகவும் பகிரங்கமாகவே இந்த ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவதாக லண்டனைச் சேர்ந்த திபெத்திய வரலாற்றுப் பள்ளி பேராசிரியர் ராபர்ட் பார்னட் கூறியுள்ளார்.




பெயுல் கெம்பஜோங் பகுதியில் ஒரு பெரிய நகரத்தையே உருவாக்கும் அளவுக்கு கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது சீனா. இன்னொரு இடத்திலும் இதேபோன்ற திட்டத்துடன் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. பூட்டானுடன் ஒரு பக்கம் எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபக்கம் இப்படி ஆக்கிரமிப்புகளையும் நடத்தி வருகிறது சீனா.


பெயுல் பகுதியில் நடந்துள்ள ஆக்கிரமிப்பு பூட்டான் அரச குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், ராஜ குடும்பத்தின் பூர்வீகம் இந்தப் பகுதியில்தான் உள்ளது. இந்தப் பகுதியை இப்போது சீனா ஆக்கிரமித்து வருவது ராஜ குடும்பத்தை பெரும் கோபமடையச் செய்துள்ளது. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது ராஜ குடும்பம்.




சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு வெறியால் பூட்டானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கூட ஆபத்துதான். ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை வளைத்துக் கொண்டுள்ளது சீனா. இதுதொடர்பாக 2017ம் ஆண்டு, டோக்லாம் பகுதியில் இந்திய, சீனப் படையினருக்கு இடையே பெரும் மோதலும் ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.


பூட்டான் நிலப்பரப்பை ஆட்டையைப் போட்டுக் கொண்டிருக்கும் சீனாவின் செயலை இந்தியாவும் உன்னிப்பா கவனித்து வருகிறது.