சிம்பன்சிகளுக்கும் மெனோபாஸ் உண்டு.. புதிய கண்டுபிடிப்பு!

Su.tha Arivalagan
Oct 31, 2023,06:47 PM IST

லாஸ் ஏஞ்சலெஸ்: பெண் சிம்பன்சிகளுக்கும் மெனோபாஸ் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய ஆதாரம் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மனிதர்களைப் போலவே சிம்பன்சிகள் மத்தியிலும் மெனோபாஸ் வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. 


பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தைத்தான் நாம் மெனோபாஸ் என்று சொல்கிறோம். 45 வயதுக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் இது வரலாம். இதேபோல விலங்குகளுக்கும் வருகிறதா என்று கண்டறிய நீண்ட காலமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது பெண் சிம்பன்சிகளுக்கு இதுபோல மெனோபாஸ் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.




மனிதர்களுக்கு வருவதைப் போலவே சிம்பன்சிகளுக்கும் உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக மேற்கு உகாண்டாவில் உள்ள நகோகோ என்ற வகை சிம்பன்சிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 30 வயதாகும்போது இந்த வகை பெண் சிம்பன்சிகளுக்கு மெனோபாஸ் ஏற்படுவது தெரிய வந்தது.


30 வயதுக்கு மேல் இந்த வகை சிம்பன்சிகள் கர்ப்பம் தரிப்பதில்லை. குழந்தைப் பிறப்பும் குறைந்து போய் விடுகிறது.  குறிப்பாக 50 வயதுக்கு மேல் இந்த குரங்குகளுக்கு பிறப்பு ஏற்படுவதில்லை. இதுதொடர்பாக விரிவான ஆய்வறிக்கை ஒன்றை, இதுதொடர்பாக ஆய்வு செய்த, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு வெளியிட்டுள்ளது.


இந்த ஆய்வுக்காக கிபாலே தேசிய பூங்காவில் உள்ள 185 சிம்பன்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 1995ம் ஆண்டு முதல் 2016ம் வரையிலான  தரவுகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பெண் சிம்பன்சிகளிடமும் இதுதொடர்பான ஆய்வு புதிய, ஆச்சரியகரமான தகவல்களை நமக்குக் கொடுத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.