ஒரு சாதாரண பேச்சுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
Mar 24, 2023,11:35 AM IST
சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய சாதாரண பேச்சுக்கு இவ்வளவு பெரிய சிறைத் தண்டனை கொடுப்பது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது மட்டுமல்ல, வரலாறு காணாததும் கூட என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சூரத் மாவட்ட கோர்ட், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. தீர்ப்பு குறித்து இரு விதமான கருத்துக்கள் வருகின்றன. பாஜக தரப்பு மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இந்தத் தண்டனையை வரவேற்றுள்ளனர்.
அதேசமயம், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த தண்டனை மிக மிக அதிகமானது, தேவைற்றது என்று கருத்து கூறி வருகின்றன. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறுகையில், இது ஏற்றுக் கொள்ள முடியாதது. வரலாறு காணாதது. ஒரு சாதாரண பேச்சுக்காக இவ்வளவு பெரிய தண்டனை என்பது நியாயமற்றது. யாரையும் குற்றம் சாட்டும் மன நிலையில் ராகுல் காந்தி பேசவில்லை. வேண்டும் என்றே அவர் பேசவில்லை.
எதிர்க்கட்சிகளை தொடர்ந்து குறி வைத்து வேட்டையாடுகிறது பாஜக. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறது பாஜக. அதன் அட்டகாசங்கள் விரைவில் முடிவுக்கு வரும். நான் அன்பு சகோதரர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி எனது ஆதரவைத் தெரிவித்தேன். நிச்சயம் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.