கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Meenakshi
Jun 20, 2024,01:28 PM IST

சென்னை:   கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தி,வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற  உடல்உபாதைகளால், பாதிக்கப்பட்டு 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதலில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 




உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 39 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் உடனடியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.மேலும், மாவட்ட காவல்துறையின் பலர் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர்.உயிர் இழப்பு அதிகரித்து கொண்டே வரும் சம்பவம் இப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. 2000 மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள்,டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,  ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் முதல்வர் உத்தரவின் பேரில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.