அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமிக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Meenakshi
Mar 27, 2025,06:34 PM IST

சென்னை:  சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.


கடந்த 25ம் தேதி டெல்லிக்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிரத்யேகமான நபர் யாரையும் பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன் என்று கூறியிருந்தார். இதனையடுத்து, திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சென்றிருந்தனர். 




டெல்லியில் இருந்து சென்னை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். கல்வி நிதி, இரு மொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தோம். அதே போல் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் பேசியுள்ளோம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசவேயில்லை என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார். எனக்கு யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது என்று சொன்னேன். அதன்பின் டெல்லியில் கேட்ட போது, யாரையும் சந்திக்க வரவில்லை எங்கள் கட்சி அலுவலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினார். ஆனால், மாலையில் மூன்று கார்களில் மாறி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். நான் யாரையும் சந்திக்க வேண்டாம் தவிருங்கள் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அங்கே சென்று தமிழ்நாட்டின் உரிமைகளை கேளுங்கள்.ஆனால் அவர் இரு மொழிக் கொள்கை குறித்து பேசி இருக்கிறேன் என்று தெரிவித்தார். 


 அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி எப்படி இருமொழி கொள்கை தொடர்பாக பேசி இருக்கிறேன் என்று சொன்னாரோ, அதேபோல் அடுத்த முறை டெல்லி செல்லும் போது வக்பு வாரிய சட்ட திருத்தம் மசோதா குறித்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார்.