காவல்துறையின் தீவிர நடவடிக்கை.. கஞ்சா பயிரிடப்படுவது முழுவதும் தடுப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Oct 19, 2024,06:15 PM IST

சென்னை:   காவல்துறையின் தீவிரமான நடவடிக்கைகளால் மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது. கைது மட்டுமல்லாமல், போதைப்பொருள் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை கிண்டியில் தென்மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு குழு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:




இந்த மாநாட்டை முன் நின்று நடத்தும் தமிழ்நாடு காவல்துறையானது அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்துக்கு, குறிப்பாக போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கு இடையே செயல்படக்கூடிய குற்றவாளிக்கு கும்பல்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைகளில் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு உறுதிப்படுத்துகிற வகையில் மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பொறுப்பை ஏற்றுள்ளது.


அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து நம் குடிமக்கள் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் கடமையாற்றுவோம். ஒருங்கிணைந்து செயலாற்றுவோம் போதை பொருள்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணைய வழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுத்து நமக்கு ஒருங்கிணைந்த முயற்சி தான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை காப்பதுடன் அனைவரும் ஒரு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை நம் மாநிலங்களில் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம். தற்பொழுது கஞ்சா பயிரிடப்படுவது முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது.


இன்றைக்கு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பபடக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடியும். ஏன் தமிழ்நாட்டில் கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பக்கூடியவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோ தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கு அமைதியின்மையை உருவாக்க ஏதாவது வதந்தியை பரப்புவீர்களா என்று யூடியூபர் ஒரு வழக்கில், சமூக வலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடி இருந்ததை இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.  ஆகவே சமூக வலைதளங்களில் வரக்கூடிய வதந்திகளை பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்