மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Meenakshi
Oct 30, 2024,04:53 PM IST

சென்னை:  மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.11.9 கோடி மதிப்பில்  

புதிய சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். செல்லூரில் இந்த சிமென்ட் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.


மதுரையில் கடந்த 25ம் தேதி 2 மணி நேரத்திலேயே சுமார் 8 சென்டிமீட்டர் கனமழை பதிவானது. இதனால், மதுரை மாநகரின் பல பகுதிகள் மழை நீரால் ஸ்தம்பித்தன. குறிப்பாக வைகையின் வட கரையில் உள்ள செல்லூர், ஆத்திகுளம், புதூர், சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செல்லூரில் மட்டும் பெய்த கனமழையின் எதிரொலியாக சாலையில் தேங்கிய நீர் படிப்படியாக வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்தனர்.




சென்னையைப் போல, மதுரையிலும் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும்  கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

 

மதுரையில் வைகை ஆறு நகருக்குள்ளேயே ஓடுகிறது. எனவே இரு கரைகளிலும் மழை நீர் வடிகால்களை முறைப்படுத்தி மழை நீரை ஆற்றுக்குள் வந்து விழுமாறு வசதிகள் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெள்ளம் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 


இந்த நிலையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்படியே மதுரையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.  இதில், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏ தளபதி, எம்பி சு.வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் கனமழை பாதிப்புகள், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சிஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன்.


அப்போது, செல்லூர் பகுதியில் கூடுதல் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து எடுத்துக் கூறினர். உடனடியாக, 11 கோடியே 90 இலட்சம் ரூபாயை அதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரத் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்