இறுதி கட்ட பிரச்சாரம்.. சென்னை பெசன்ட் நகரில் இன்று.. பைனல் டச் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Apr 17, 2024,01:26 PM IST

சென்னை: தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பெசன்ட் நகரில்  இன்று மாலை 4 மணிக்கு இறுதி கட்ட பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39  தொகுதிகளிலும் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடைபெறும்.  39 தொகுதிகளிலும் சுமார் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற் கட்ட வாக்குப்பதிவின் போது விளவங்கோடு சட்டமன்ற  தொகுதிக்கும் சேர்ந்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறனையும் மற்றும் தென் சென்னை தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனையும் ஆதரித்து முதல்வர்  ஸ்டாலின் பெசன்ட் நகரில் இன்று மாலை பிரச்சாரம்  செய்கிறார். இந்த பிரச்சாரத்துடன் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் நிறைவு செய்கிறார்.


தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் அனைத்து வகையான பிரச்சாரமும் தடை செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.