புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை.. தமிழ்நாட்டில் உதயமான 4 புதிய மாநகராட்சிகள்!
சென்னை: புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை காணொளி மூலமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை அரசுக்கு வந்தது. இதனை ஏற்ற அரசும் விரைவில் மாநகராட்சிகளாக மாற்றப்படும் என்று கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவித்தது. இதனை அடுத்து புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதாவை சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்துடன் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி அருகே அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு அடையும் என்றும், இந்த 4 நகராட்சிகளும் மாநகராட்சிகளாக மாறியதால் இங்கு உள்ளவர்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மேயர், அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்