Happy New year: மதவாத சக்திகளுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது.. ஸ்டாலின் எச்சரிக்கை

Su.tha Arivalagan
Dec 31, 2022,10:37 PM IST
சென்னை: அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும்,  முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை விரிவாகப் பட்டியலிட்டு பேசி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ள சில முக்கியமான கருத்துக்கள்:


தமிழக மக்களை ஜாதீய, மதவாத சக்திகள் பிரித்தாள முயலுகின்றன. இவர்களின் சதிச் செயலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது, இடம் அளிக்கக் கூடாது. மக்களிடையே துவேஷத்தையும், வெறுப்பையும் இவர்கள் விதைக்க முயலுகின்றனர். மொழியால், இனத்தால் தமிழன் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்.

திராவிட மாடல் அரசின் முக்கிய நோக்கமே, கல்வி, வேலைவாய்ப்பு, அறிவுசார் துறை, தொழில்துறை,  சமூக வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த லட்சியத்திற்காக என்னையே ஒப்படைத்துக் கொண்டு செயல்படுவேன். தமிழக மக்கள் இதற்கு மனமார்ந்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

சமூக நீதியிலும், மதச்சார்பின்மையிலும் தமிழகம் செழித்தோங்க வேண்டும். இதற்கு தமிழக மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.  நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக திகழ முடியும்.

2022ம் ஆண்டு தமிழகம் அனைத்துத் துறையிலும் செழித்தோங்கியது.  2021ம் ஆண்டு நிலவிய பின்னடைவிலிருந்து நாம் மீண்டோம்.  மீண்டும் நல்லநிலைக்கு மக்கள் திரும்ப 2022ம் ஆண்டில் நாம் வழி கோலினோம். 2023ம் ஆண்டில்மக்களை சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதே எங்களது அரசின் லட்சியமாகும். மக்களின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்ப்பதே எனக்கு முக்கியம்.  எனவே இந்த முதல்வர் பொறுப்பை மிகுந்த பொறுப்புணர்வுடன் நான் பயன்படுத்தி வருகிறேன்.

எனக்கு வாக்களிக்காத மக்களின் அன்பையும், பாராட்டுகளையும் பெறும் வகையில் நான் செயல்பட்டு வருகிறேன்.  அப்படிப்பட்ட பாராட்டுகள்தான் என்னை மேலும் வேகமாக செயல்பட வைக்கிறது.  நாட்டிலேயே மிகச் சிறந்த முதல்வராக என்னையும், மிகச் சிறந்த மாநிலமாக தமிழகத்தையும் ஊடகங்கள்தேர்வு செய்துள்ளன. இது தினசரி நாங்கள் கடுமையாக உழைத்து வருவதற்கான பலனாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.