முடிந்தது இழுபறி.. சத்திஸ்கர் முதல்வராகிறார்.. முன்னாள் மத்திய அமைச்சர்.. விஷ்ணு தியோ சாய்!

Su.tha Arivalagan
Dec 10, 2023,05:48 PM IST

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநில முதல்வர் பிரச்சினைக்கு ஒரு வழியாக தீர்வு கண்டு விட்டது பாஜக. பெரும் இழுபறிக்குப் பின்னர் அந்த மாநில முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியா சாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் அங்கு  சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகா பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக 54 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது.




பெரும் வெற்றியைப் பெற்று விட்டாலும் கூட முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்குள் பாஜகவுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. 3 முறை முதல்வராக இருந்த மூத்த தலைவர் ரமன் சிங் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் எதிர்ப்பும் நிலவி வந்தது. இதனால் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் குழப்ப நிலை ஏற்பட்டது.


பாஜக மேலிடப் பார்வையாளர் அர்ஜூன் முண்டா தலைமையிலான உயர் மட்டக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இறுதியில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் விஷணு தியோ சாயை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக (முதல்வராக) பாஜக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.


59 வயதாகும் விஷ்ணு தியோ சாய் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர். இவர் முன்னாள் முதல்வர் ரமன் சிங்குக்கு நெருக்கமானவர். இதன் மூலம், தான் முதல்வராக முடியாவிட்டாலும் கூட தனது ஆதரவாளரை முதல்வர் பதவிக்குக் கொண்டு வந்து விட்டார் ரமன் சிங்.


2006ம் ஆண்டு சத்திஸ்கர் மாநில பாஜக தலைவராக  செயல்பட்டவர் விஷ்ணு தியோ சாய். பாஜக தேசிய செயற்கு குழு உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.