சென்னைக்கு என்னதான் ஆச்சு.. வந்த சந்தோஷம் சப்புன்னு போயிருச்சே.. சரிந்து போன வாக்கு சதவீதம்!
சென்னை: சென்னை வழக்கம் போல குறைந்த வாக்குப் பதிவையே பதிவு செய்துள்ளது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி அதிக அளவிலான வாக்குப்பதிவு நடந்திருப்பதாக செய்திகள் வந்து அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த சந்தோஷம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை.
தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குப் பதிவு மத்திய சென்னையில்தான் பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் மத்திய சென்னைதான் எப்போதும் குறைந்த அளவில் வாக்குப் பதிவை காணும். இங்குள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் ஓட்டுப் போடுவதே இல்லை. பெரும் பெரும் பணக்காரர்கள், எலைட் எனப்படும் மேல் தட்டு வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி இந்த மத்திய சென்னை. இந்த தொகுதியில்தான் இப்படி ஒரு அவமானம் ஒவ்வொரு தேர்தலிலும் அரங்கேறி வருகிறது.
தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகள் பதிவாகியுள்ளன.தென் சென்னையில் 54.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னைக்கு அருகாமையில் உள்ள தொகுதிகளில் நடந்த வாக்குப் பதிவைப் பார்த்தால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற தொகுதிகளான, காஞ்சிபுரம் (தனி) 71.5, அரக்கோணம் 74.08, திருவள்ளூர் (தனி) 68.31 என்று நல்ல வாக்குப் பதிவைக் கண்டுள்ளன.
வட சென்னை
வட சென்னையைப் பொறுத்தவரை கடந்த 1980ம் ஆண்டு 71.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன் பிறகு ஒரு முறை கூட வட சென்னையில் வாக்குப் பதிவு விகிதம் 70 சதவீதத்தைத் தொட்டதில்லை. ஏன் 65 சதவீதத்தையே தொட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. 1980ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்த அளவாக 1999ம் ஆண்டு வெறும் 43.79 சதவீத வாக்குகளே பதிவாகின. 2004ல் 45.77 சதவீத வாக்குகள் பதிவாகின. 1998 தேர்தலில் 46.58 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த 3 தேர்தல்களில்தான் வட சென்னையில் 50 சதவீதத்திற்கும் கீழே வாழ்க்குப் பதிவு விகிதம் போயிருந்தது.
கடந்த 2019 ம் ஆண்டு நடந்த தேர்தலில் வட சென்னையில் 64.04 சதவீத வாக்குககள் பதிவாகியிருந்தன. இந்த முறை 60.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது கடந்த ஆண்டை விட இப்போது 4 சதவீதம் சரிந்து போய் விட்டது.1989ம் ஆண்டுக்குப் பிறகு இங்கு 60 சதவீத அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளது.
1980 முதல் வருட வாரியாக வாக்குப் பதிவு விவரம்:
2024 - 60.13%
2019 - 64.04%
2014 - 62.76%
2009 - 64.90%
2004 - 45.77%
1999 - 43.79%
1998 - 46.58%
1996 - 55.85%
1991 - 55.13%
1989 - 60.91%
1984 - 51.33%
1980 - 71.31%
தென் சென்னை
பாரம்பரியம் மிக்க தென் சென்னை ஸ்டார் தொகுதியாகும். டாக்டர் தமிழிசை, சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், டாக்டர் ஜெயவர்த்தன் என்று முக்கியத் தலைவர்கள் முட்டி மோதியுள்ள தொகுதி இது. இந்தத் தொகுதியில் 54.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2004ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வாக்குப் பதிவு நடந்தது இப்போதைய தேர்தல்தான். 2004ம் ஆண்டு தேர்தலில் இங்கு 47.54 சதவீத வாக்குகளே பதிவாகின. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் 55 சதவீதத்திற்குக் குறையாமல் வாக்குகள் பதிவாகி வந்தன. இப்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014 தேர்தலில் 58.54 சதவீத அளவிலும், 2019 தேர்தலில் 56.92 சதவீத அளவிலும் வாக்குப் பதிவு நடந்திருந்தது. இப்போது அதிலும் சரிவு ஏற்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் 62.66 சதவீத அளவில் வாக்குப் பதிவு நடந்திருந்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் ஒருமுறை கூட இந்தத் தொகுதியில் வாக்குப் பதிவு 60 சதவீதத்தைத் தொட்டதில்லை.
1980 முதல் வருட வாரியாக வாக்குப் பதிவு விவரம்:
2024 - 54.27%
2019 - 56.92%
2014 - 58.54%
2009 - 62.66%
2004 - 47.93%
1999 - 45.15%
1998 - 47.35%
1996 - 56.28%
1991 - 53.19%
1989 - 59.72%
1984 - 65.84%
1980 - 68.09%
மத்திய சென்னை
மத்திய சென்னை நீண்ட காலமாகவே குறைந்த வாக்குப் பதிவைக் கண்டு வரும் சென்னை தொகுதிகளில் ஒன்று. கடந்த நான்கு தேர்தல்களாகவே அது 60 சதவீதத்தைக் கூட தொட முடியாமல் உள்ளது. 2014ல் 59.71, 2019ல் 58.75 என்று பதிவான வாக்குப் பதிவு, இந்த முறை மிகவும் மோசமான நிலைக்குப் போய் 53.91 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்தத் தொகுதியில் 1980ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் குறைந்த வாக்குப் பதிவு நடந்த ஆண்டு 1999 ஆகும். அப்போது வெறும் 48.46 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சென்னையில் கடந்த 1980ம் ஆண்டு முதல் இதுவரை பதிவான வாக்குப் பதிவு குறித்த விவரம்:
2024 - 53.91%
2019 - 58.75%
2014 - 59.71%
2009 - 60.98%
2004 - 49.06%
1999 - 48.46%
1998 - 49.50%
1996 - 57.69%
1991 - 54.28%
1989 - 60.76%
1984 - 64.14%
1980 - 67.93%
சென்னை தொகுதிகள் தொடர்ந்து இப்படி குறைந்த வாக்குப் பதிவைக் கண்டு வருவது அனைவரையும் அயர்ச்சி அடைய வைத்துள்ளது.