சைதாப்பேட்டை பக்கம் போறீங்களா.. புதுசா ஒரு "யு டர்ன்" வந்திருக்கு.. இதைப் படிங்க!

Su.tha Arivalagan
Nov 17, 2023,06:49 PM IST

சென்னை: சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் புதிதாக ஒரு யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:


சைதாப்பேட்டை எம்சி ராஜா மருத்துவமனைக்கு எதிரே ஒரு புதிய யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை -நந்தனம் இடையே சோதனை ரீதியாக நவம்பர் 17ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு புதிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




தற்போது நந்தனம் சந்திப்பிலிருந்து தி.நகர் நோக்கி வரும் வாகனங்கள், சிஐடி நகர் முதல் மெயின் ரோடு மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து வலது பக்கம் திரும்பிச் சென்று கொண்டுள்ளன. இன்று முதல் அந்த வாகனங்கள் அப்படிச் செல்லாமல், வலது பக்கம் திரும்பாமல் நேராக 50 மீட்டர் சென்று,  எம்சி ராஜா மருத்துவமனை எதிரே யு டர்ன் போட்டு திரும்பிச் செல்ல வேண்டும்.


அதேபோல தற்போது சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள், ஜோன்ஸ் சாலை சந்திப்பில் உள்ள தாதண்டர் நகர் பொதுப்பணித்துறை குடியிருப்பு நோக்கி வலது புறம் திரும்பிச் செல்கின்றன.  அதற்குப் பதில், இனிமேல் மேலும் 50 மீட்டர் நேராக சென்று, யு டர்ன் போட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.