4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு.. மீண்டும்.. சென்னை டூ ஹாங்காங் நேரடி விமான சேவை.. இன்று முதல்!
சென்னை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை டூ ஹாங்காங் இடையேயான விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஹாங்காங் நேரடி விமான சேவை நான்காண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் இன்று வரை உள்ளது என்பதற்கு உதாரணமாக இதனை எடுத்துக்கொள்ளலாம். கொரோனாவால் விமான சேவை மிகவும் பாதிக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றாக சரியாகி வந்த நிலையில் இன்று சென்னை டூ ஹாங்காங் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கி பல்வேறு வர்த்தக நிறுவனங்களை மகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கில் இருக்கும் பசிபிக் ஏர்லைன் விமான நிறுவனம் மூலம் நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று ஊரடங்கு சமயத்தில் சென்னையில் இருந்து உலகம் முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் துவங்கப்பட்டது. ஒரு சில நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் சென்னையில் இருந்து சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு ஹாங்காங் விமான நிலையம் இணைப்பு விமான நிலையமாக இருப்பதால் அங்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. பெரும்பாலான பயணிகள் இந்த விமான சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கியுள்ளது.
பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு தனது நேரடி விமான சேவையை துவங்க உள்ளது. வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிப்பட்டுள்ளது. விரைவில் தினசரி விமானசேவையாக இயக்கப்பட உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.