சென்னை திருவொற்றியூர் பள்ளியில்.. மீண்டும் காஸ் கசிவு.. 2 பேர் மயக்கம்.. அலறி அடித்து ஓடிய மாணவிகள்
சென்னை: சென்னை திருவெற்றியூரில் உள்ள பள்ளியில் ஏற்கனவே வாயு கசிவு ஏற்பட்டு இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு இரண்டு மாணவிகள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. அப்போது இந்த வாயு கசிவால் பள்ளியில் உள்ள 45 மாணவ மாணவியருக்கு மயக்கம், மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து இந்த வாயு கசிவிற்க்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. வழக்கம்போல் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டு இரண்டு மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கமுற்றனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்த பெற்றோர்கள் விரைந்து வந்து பள்ளியை முற்றுகையிட ஆரம்பித்தனர். பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவ மாணவியர் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பலர் அலறி அடித்தபடி வெளியில் ஓடி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்