நல்லா இருந்த ஊரும்.. நாசமாய் போன ரோடும்.. குத்துயிரும் குலை உயிருமான சாலை.. குமுறும் பொதுமக்கள்!
சென்னை: தேர்தல் நேரத்தில் வழக்கமாக ரோடு போட்டு மக்களை குஷிப்படுத்தவே எல்லோரும் முயல்வார்கள். ஆனால் தேர்தல் நேரம் பார்த்து ஒரு ரோட்டை குதறிப் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதியான அஸ்தினாபுரம், திருமலை நகர் பிரதான சாலைக்குத்தான் இப்படி ஒரு கதி நேர்ந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியின் 39வது வார்டுக்குட்பட்ட பகுதிதான் திருமலை நகர். 15க்கும் மேற்பட்ட தெருக்களைக் கொண்ட திருமலை நகர் மிகப் பெரிய நகர், மிக முக்கியமான பகுதியும் கூட. அஸ்தினாபுரத்திலிருந்து குரோம்பேட்டை, செம்பாக்கம், நன்மங்கலம், காமராஜபுரம், மேடவாக்கம் செல்ல இதுதான் இணைப்புப் பகுதியாக உள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் சாலை
தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதி, நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் பகுதி, பள்ளிக் கூடம், மருத்துவமனைகள் என்று மிக வேகமாக வளர்ந்த நகராக இது மாறியும் கூட அடிப்படை வசதிகள் இன்னும் மோசமாகத்தான் உள்ளன. இங்குள்ள சாலைகள் அனைத்தும் மோசமடைந்து இருந்த நிலையில், நீண்ட கால கோரிக்கைக்குப் பின்னர் சமீபத்தில்தான் சில உட்புறச் சாலைகள் சரி செய்யப்பட்டன. இன்னும் கூட பல சாலைகள் மோசமான நிலையில்தான் உள்ளன. முதல் பிரதான சாலையும் அதேபோல போடப்படாமல் இருந்தது.
மழை நீர்க் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்ததால் அது முடிந்த பிறகு போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது முடிந்தும் போடவில்லை. பாதி சாலைதான் போடப்பட்டது. சரி, மழை விட்ட பிறகு மீதம் உள்ள சாலையைப் போடுவார்கள் என்று பார்த்தால் அப்போதும் போடவில்லை. இப்போது வெயில் காலமும் வந்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு பிரதான சாலையில் போடப்படாத சாலைப் பகுதி சுரண்டி எடுக்கப்பட்டது. ஆஹா, நல்ல காலம் பொறந்துருச்சு என்று மக்கள் மகிழ்ந்த நிலையில் அவர்கள் கண்ணில் மட்டுமல்ல, கனவிலும் கூட மண்ணைப் போட்டு விட்டனர்.
புழுதியில் சிக்கி மக்கள் அவஸ்தை
சாலையைச் சுரண்டி எடுத்ததால் ஒரே புழுதிப் படலமாக இருக்கிறது. டூவீலர்கள் சறுக்கி விழுவது சகஜமாகி விட்டது. சாலையோரம் உள்ள வீடுகள், கடைகள் புழுதிக் காடாக மாறியுள்ளன. ஆஸ்துமா, வீஸிங் பிரச்சினை உள்ளவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதோ இப்போது தேர்தலும் வந்து விட்டது. தேர்தலை ஒட்டியாவது போடுவார்கள் என்று பார்த்தால் அதிலும் குண்டைப் போட்டுள்ளனர். அதாவது கட் அன்ட் கால்வாய் வந்த பிறகுதான் இந்த சாலை போடப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்களாம்.
அதற்கு திருமலை நகர் குடியிருப்போர் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் செயலாளரும், 39வது வட்ட திமுக துணை செயலாளருமான எஸ். ஜெய்குமார் கூறியுள்ளதாவது:
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக 39-வது வார்டுக்குட்பட திருமலை நகர் முதல் பிரதான சாலையை, புதிய சாலை போடுவதற்காக பழைய சாலையை பெயர்த்து எடுத்தார்கள். ஆனால் இன்று வரை சாலை போடப்படவில்லை, காரணம் கேட்டால் அதே சாலையில் கட் அன்ட் கால்வாய் வருவதால் கால்வாய் பணிகள் முடிந்த பிறகு தான் சாலை போடப்படும் என்கிறார்கள்.
கட் அன்ட் கால்வாய் போட்ட பின்பு தான் புதிய சாலை போடப்படும் என்றால் பழைய சாலையை பெயர்த்து எடுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? சாலையை பெயர்த்து எடுத்ததால் ரோட்டின் இரு புறமும் உள்ள வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் தூசி மையமாக மாறிப் போய் உள்ளன.
பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசம்
ஏற்கனவே இந்த வார்டு பகுதியில் உள்ள திருமலை நகர் இரண்டாவது மெயின் ரோடு, 3வது மெயின் ரோடு விரிவு, 3வது தெரு, 8வது தெரு, 12வது தெரு, 17 வது தெரு, நவநீதம் நகர் விரிவு சாலை மற்றும் ஏர்போர்ட் காலனியை சுற்றி உள்ள சாலைகள் என பெரும்பாலான சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக உள்ளன.
இந்த நிலையில் ஓரளவு சுமாராக இருந்த முதல் பிரதான சாலையை பெயர்த்து எடுத்து விட்டு, தற்போது கட் அன்ட் கால்வாய் பணிகள் முடிந்த பிறகு தான் சாலை போடப்படும் என்கிறார்கள். ஏன் இந்த சாலையில் கட் அன்ட் கால்வாய் வருவது அதிகாரிகளுக்கு முன்பே தெரியாதா... சாலையை பெயர்த்த பின்பு தான் தெரியுமா... என்னை போன்ற சாதாரண ஆட்களுக்கே 45 நாட்களுக்கு முன்பே தெரியும் அந்த சாலையில் கட்டன் கால்வாய் வருவது, அப்படி இருக்கும் போது செம்பாக்கம் மண்டல அதிகாரிகளுக்கு தெரியாதா... அல்லது தெரிந்தே தான் சாலையை பெயர்த்திட அனுமதித்தனரா. அனுமதித்து விட்டு சாலை போடாமல், கட் அன்ட் கால்வாய் கதையை சொல்கிறார்களா...?
தேர்தல் வந்தால் புதிய சாலைகளை போட்டு மக்களை திருப்தி செய்வார்கள். ஆனால் இருக்கும் சாலையை மேலும் மோசமாகி மக்களிடம் அதிருப்தியை உருவாக்குகிறார்கள் செம்பாக்க மண்டல அதிகாரிகள்.... அந்த சாலை சாதாரண சாலை அல்ல.. மிக முக்கியமான சாலை.. செம்பாக்கம் அஸ்தினாபுரம் மேடவாக்கம் குரோம்பேட்டை ஆகியவற்றை இணைக்கக் கூடிய மிக முக்கியமான இணைப்பு சாலை... பிரபலமான Zion பள்ளி உள்ள சாலை.. தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் பயணிக்க கூடிய சாலை, இப்படி முக்கியமான சாலையை பெயர்த்து எடுத்து குண்டு குழியுமாக ஆக்கி இருப்பது எந்த விதத்தில் சரி?
செம்பாக்கம் மண்டல அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்கிறார்களா அல்லது யாருக்காக வேலை செய்கிறார்கள்.. பொதுவாகவே செம்பாக்கம் ஊராட்சியாக இருந்த போதும் சரி, பேரூராட்சியாக இருந்த போதும் சரி, நகராட்சியாக இருந்த போதும் சரி, திருமலை நகர் பகுதியை தொடர்ந்து புறக்கணிப்பது தான் சிலரின் வேலை... குடிநீர் தொட்டி வரக் கூடாது, சமுதாய கூடம் வரக் கூடாது, பிளே கிரவுண்ட் வரக் கூடாது, நூலகம் வரக் கூடாது, உடற்பயிற்சி கூடம் வரக் கூடாது, இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் வரக் கூடாது என்று சிலர் தொடர் முட்டுக்கட்டைகளை போட்டார்கள்.
முட்டுக்கட்டைகள் அகல வேண்டும்
சிலர் போடும் முட்டுக் கட்டைகள், தடைகளை எல்லாம் தாண்டி தான் நல சங்க நிர்வாகிகள் முழு முயற்சி எடுத்து மேற்கண்ட திட்டங்களை கொண்டு வந்தார்கள். அப்படி கொண்டு வந்த திட்டங்களை இழுத்து மூடுவதையே குறிக்கோளாக கொண்டு சிலர் தற்போதும் செயல்பட்டு வருகிறார்கள். அந்த சிலரின் துணையோடு ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கும் வகையில் செம்பாக்கம் மண்டல குழு அதிகாரிகளின் தொடர் செயல்பாடுகளும் உள்ளது.. அதிகாரிகளின் இத்தகைய மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எனது வன்மையான கண்டனத்தை பொது மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மழை வெள்ளக்காலத்தில் இந்தப் பகுதி கடும் பாதிப்பை சந்திக்கும். நகரின் பாதிப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும். இதற்குப் போக்குக் கால்வாய் ஆக்கிரமிப்பே மிக முக்கியக் காரணம். அதுவும் இதுவரை எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் காணப்படாமல் உள்ளது. அதை சரி செய்யத்தான் இந்த கட் அன்ட் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதுவும் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இப்போது சாலையையும் சுரண்டிப் போட்டு புழுதி பறக்க விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
மக்கள் பாவம் இல்லையா?