டிஜிட்டல்  பணப் பரிவர்த்தனையில்.. இந்தியாவிலேயே 5வது இடத்தில்.. சென்னை!

Su.tha Arivalagan
Apr 19, 2023,04:22 PM IST
சென்னை: 2022ம் ஆண்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியாவிலேயே 5வது இடத்தில் உள்ளது சென்னை மாநகரம்.

டிஜிட்டர் பரிவர்த்தனை உலகம் முழுவதும் இப்போது படு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்குப் பிந்தைய உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனைதான் அதிகமாக உள்ளது. பத்து ரூபாய்க்குப் பொருள் வாங்கினாலும் கூட  நம்மவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை நாடும் அளவுக்கு அது பாப்புலராகி விட்டது. 

இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக அளவு டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நகரங்கள் வரிசையில் சென்னைக்கு 5வது இடம் கிடைத்துள்ளதாக வேர்ல்ட்லைன் இந்தியா என்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு 14. 3 மில்லியன் அதாவது 1.43 கோடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண மதிப்பில் இது 35.5 பில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடியாகும்.

இந்த வரிசையில் பெங்களூருதான் டாப்பில் உள்ளது.  அங்கு கிட்டத்தட்ட 3 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 53ஆயிரம் கோடியாகும். டெல்லி 2வது இடத்தில் உள்ளது. 3வது இடம் மும்பைக்கு. பெருநகரங்களின் வரிசையில் வராத புனே நகரம் இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தைப் பிடித்து சென்னையை பின்னுக்குத் தள்ளியிருப்பது ஆச்சரியமானது. புனே நகரில் ரூ. 26 ஆயிரம் கோடி அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

2022ம் ஆண்டு பலசரக்கு கடைகள்,  ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், மருந்துக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகங்கள் ஆகியவற்றில் மொத்தமாக  43 சதவீத அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.

ஈ காமர்ஸ் தளங்கள், கேமிங், நிதி சேவைகள் ஆகியவற்றில் 25 சதவீத அளவுக்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்துள்ளது. கல்வி, போக்குவரத்து, விருந்தோம்பல் சேவைகள் ஆகியவற்றில் 15 சதவீத அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.