வாழ்நாள் முழுக்க முதல்வருக்கு நன்றி செலுத்துவேன்.. ஜாமினில் விடுதலையான செந்தில் பாலாஜி நெகிழ்ச்சி

Su.tha Arivalagan
Sep 26, 2024,08:13 PM IST

சென்னை: என் மீது அன்பு செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்நாள் முழுக்க நன்றி செலுத்துவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு தொடரப்பட்டது. இதை சட்டரீதியாக எதிர்கொண்டு வெளியே வருவேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


முன்னதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து அவர் புழல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். அவரை சிறை வளாகத்திற்குள் சென்று ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் வரவேற்று அழைத்து வந்தனர்.


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் விடுதலை செய்யும் உத்தரவை இன்று காலை  உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு நபர் ஜாமின் உத்தரவாதத்தை தாக்கல் செய்து ஜாமின் பெறலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.




அதன்படி ரூ. 25 லட்சம்  ஜாமின் உத்தரவாதம் உள்ளிட்ட உச்சநீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவாதங்களையும் அவரது வழக்கறிஞர்கள் இன்று முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்பு தாக்கல் செய்தனர். அதேபோல செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் இருப்பதாக நீதிபதி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அமலாக்கத்துறை வழக்கறிஞரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.


அமலாக்கத்துறை வழக்கறிஞரும் வந்து சேரவே, செந்தில் பாலாஜி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஆட்சேபனை இல்லை என்று அவர் தெரிவித்தார். பின்னர் நீதிபதி அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து கடைசியில் ஜாமின் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பின்னர் இமெயில் மூலம் புழல் சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலையாவதில் ஏற்பட்ட தாமதம் நீங்கியது.


ஆயிரக்கணக்கான தொண்டர்கள்


செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே ஆயிரக்கணக்கான திமுகவினர் மாலை முதலே குழுமியிருந்தனர். அவர்களின் தடபுடலான வரவேற்புக்கு மத்தியில் வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி. மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் செந்தில் பாலாஜியை அவர்கள் வரவேற்றனர். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்