சென்னையில் ஒரு கிராமத்துத் திருவிழா.. 27 முதல் 29 வரை.. முத்தான 3 நாட்கள்.. என்ஜாய் பண்ணுங்க!

Manjula Devi
Sep 25, 2024,05:38 PM IST

சென்னை:   கிராம வாழ்க்கையை நினைவுபடுத்தம் விதமாக, தொண்டைமண்டலம் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா என்ற விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா வரும் செப்டம்பர் 27 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இந்த விழாவுக்கு அனைவரும் தவறாமல் வர வேண்டும் என்று நடிகர் சூர்யா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.. எந்நாடு என்றாலும் அது நம்நாடு போல வருமா".. சினிமா பாட்டு மட்டும் இல்லைங்க, இதுதான் நமது வாழ்க்கை, உணர்வு, நமது வாசம், சுவாசம் எல்லாமே. நகர்புற வாழ்க்கையை விட கிராமப்புற வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. கிராமங்களின் எழில், கொஞ்சும் இயற்கை, புல்வெளிகள், பறவைகள் கீச்சிடும் சத்தம், நம் கண்களை குளிர்விக்கும் பச்சைபசேல் என்ற வயல்வெளிகள், நல்ல காற்றோட்டமான மண் வீடுகள், குடிசை வீடுகள் போன்றவற்றை நமது உணர்விலிருந்து பிரிக்கவே முடியாது. 


கிராமங்களில் வசதி குறைவு என்றாலும் மன அமைதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை கிராமத்தில் தான் நிலவுகிறது. அதேபோல் கிராமத்தில் வாழும் மக்களும் ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் சகோதரத்துவத்தை பின்பற்றி அன்பாக வாழ்ந்து வருகின்றனர். கிராமங்களில் எந்த வசதியும் இல்லை என்றாலும் கூட அவர்கள் இதை  பொருட்படுத்தாமல் தாங்களே உழைத்து எளிமையான முறையில், நோய் நொடிகள் இன்றி  ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். 




இது மட்டுமல்லாமல் கிராமங்களில் விழாக்காலம் என்றாலே வீட்டுக்கு வீடு திருவிழா தான். ஏனென்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த திருவிழாக்களை கொண்டாடும் அழகே தனி சுகம் தான். வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டி வீடு முழுவதும் அலங்கரிப்பர். மக்களும் அனைவரும் ஒன்றிணைந்து சமைத்து, சமத்துவ உணவு உண்பர். கிராமம் சார்பில் ஏதேனும் செய்திகள் சொல்ல வேண்டும் என்றால் தண்டோரா போட்டு ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சுக துக்க விஷயங்களை பரிமாறுவர். இப்படி பரிமாறும் போது ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி அவர்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுவர். இதன் மூலம் ஒற்றுமை பலப்பட்டது. உறவுகள் வலுத்தது. சகோதரத்துவம் நீடித்தது. மக்களுக்கு விட்டுக்கொடுக்கும் தன்மை பிறந்தது. 


ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் இந்த இயல்பான வாழ்க்கையை தொலைத்துவிட்டனர். தங்களுக்குள் ஒரு எல்லைகளை வகுத்துக் கொண்டு, அதற்குள் அக்கம்பக்கத்தினரோ உறவினர்களோ யாரும் உள்ளே வராதபடி தனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஏன் பெற்ற தாய் தந்தைகளை பிரிந்து கூட வாழப்பழகி விட்டனர்.  காலைல எந்திரிச்சு ஆபீஸ் போய்.. வேலை பார்த்துட்டு.. திரும்பி வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, தூங்கிட்டு.. மறுபடியும் திரும்பி காலையில எந்திரிச்சு. இதுக்கிடையே டிராபிக் டென்ஷன் என இப்படி நகர்ப்புற மக்கள் இயந்திர வாழ்க்கையை பின்பற்றி  வருகின்றனர்.


நகரங்களில் மாளிகைகள், வசதிகள், போக்குவரத்து சாதனங்கள், தொழில்நுட்ப சேவைகள் என பலவற்றிற்கும் அடிமையாகி நகர வாழ்க்கையை தாண்டி எதையும் சிந்திக்க முடியவில்லை. குறிப்பாக சென்னையில் பிறந்து வளர்ந்து வருபவர்களுக்கு கிராமத்தின் வாசனை துளி கூட கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு கிராம வாழ்க்கை என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அந்த அளவிற்கு  நகரமயமாதலுக்கு அடிமையாகி உள்ளனர். லீவு விட்டால் கூட வீட்டோடுதான் முடங்கிக் கிடக்க ஆசைப்படுகின்றனர். கம்ப்யூட்டரும், வீடியோ கேம்ஸும் மக்களை மாய உலகுக்குள் கொண்டு போய் முடக்கி வைத்துள்ளது.++


இது மாதிரியான சூழ்நிலைகளில் உள்ளவங்களுக்கு கிராம வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக,"சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா" என்ற நிகழ்ச்சி சென்னை வாசிகளுக்கு  ஒரு அனுபவத்தை கொடுக்க காத்திருக்கிறது. தொண்டை மண்டலம் பவுண்டேஷன் என்ற அமைப்புதான் இந்த நிகழ்ச்சியை நடத்தப் போறாங்க. இவங்க ஏரி குளங்கள் பாதுகாப்பு, கிராமப்புறங்களின் தொன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பது, விவசாயத்தைக் காப்பது, மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றனர். 


சென்னை போன்ற நகரங்களில் வேலைக்காக, குடும்பத்துக்காக பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களை விட்டு இடம் பெயர்ந்து வந்த பலர் கிராமப்புற வாழ்க்கையையும், திருவிழா அனுபவங்களையும் கலைகள், கலாச்சாரங்களையும் மறக்கும் நிலை அல்லது அதை விட்டு விலகும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அந்த அனுபவத்தைத் தருவதே இந்த விழாவின் நோக்கம்.


இந்த விழா செப்டம்பர் 27 தொடங்கி 29ஆம் தேதி வரை  சென்னை ஒய் எம் சி ஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் கிராமத்து வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், மாட்டுவண்டி ரேஸ், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர நாம் மறந்து போன சிறு தானிய உணவுகள், பாரம்பரிய மண்பானை உணவுகள், போன்றவையும் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளன. சென்னைவாசிகளே மறந்து விடாதீர்கள். உங்கள் பாரம்பரிய மீட்டெடுக்க ஒரு அருமையான வாய்ப்பு. கலந்து கொள்ளுங்கள் என்ஜாய் பண்ணுங்க..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்