சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. யார் அந்த விஷமிகள்?.. இன்டர்போல் உதவியை நாடும் போலீஸ்!

Manjula Devi
Feb 09, 2024,05:57 PM IST

சென்னை: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  மர்ம நபர்களின் ஐபி முகவரி கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இன்டர் போல் உதவியை நாட சென்னை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


இதற்கிடையே இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


சென்னையில்  கோபாலபுரம், அண்ணா நகர், முகப்பேர், ஆர்.ஏ.புரம், திருப்பாழிசை, பாரிமுனை, பூந்தமல்லி, பெரம்பூர், எழும்பூர்  பகுதிகளில் உள்ள 13 க்கும் மேற்பட்ட பிரபல தனியார் பள்ளிகளில் நேற்று காலை இமெயில் மூலம் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் தகவல் வந்தது.




இதை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் மோப்பா நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன், பள்ளிகளுக்கு விரைந்து வந்து மாணவர்களை பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.


இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு எங்கு உள்ளது என்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பள்ளிகளில் எந்த வெடிகுண்டுகளும் வைக்கப்படவில்லை.

இது வெறும் வதந்தியே என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.


இந்நிலையில் எந்த முகவரியில் இருந்து இமெயில் வந்தது என்பதை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே ஈமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது

தெரியவந்தது. அதாவது  Johnsol01@gmail.com என்ற இமெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மர்ம நபர் யார் என்பதை கண்டறிய போலீஸார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அந்த நபரின் ஐபி அட்ரஸை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இது எந்த தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் உதவியுடன் இமெயில் அனுப்பிய மர்ம நபர்களை பிடிக்க சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.