வந்தாச்சு சென்னை சங்கமம்.. நம்ம ஊரு திருவிழா.. இன்று முதல் ஜன. 17 வரை.. செம்ம என்ஜாய் பண்ணுங்க!

Manjula Devi
Jan 13, 2025,05:18 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னையில் முக்கியமான 18 இடங்களில் வருகிற 17ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.

தமிழ்நாட்டுப் பண்டிகைகளில் எத்தனையோ விழாக்கள் இருந்தாலும், ஜாதி மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழவுத் தொழிலுக்கு நன்றி செலுத்தும் விதமாக  சிறப்பிக்கும் ஒரே பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். இந்தப் பண்டிகை நாட்களில் மக்கள் தங்களின் புது வாழ்க்கையை துவங்குவது போல, வாழ்நாள் முழுவதும் உணவிற்கு குறைவிருக்காது, மகிழ்ச்சி பொங்க வேண்டும் என இறைவனை வேண்டி புதுப் பானைகளில் இனிப்பு பொங்கல்    பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என மக்கள் தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். 



தமிழரின் உணர்வோடு கலந்த இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவாக தைத்திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாளில் நமது வாழ்வில் இருள் போக்கும் சூரிய பகவானை வணங்கும் விதமாக அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் அன்பை செலுத்தும் விதமாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்நாட்களில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் போன்ற போட்டிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, மற்றும் அவனியாபுரம், பாலமேடு, பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னைக்கும் ஒரு திருவிழா.. அது சென்னை சங்கமப் பெருவிழா

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக மாநில சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை நடத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா  நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. கவிஞரும், திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதியின் சிந்தனையில் உதித்த விழாதான் இந்த சென்னை சங்கம்.

நான்காவது ஆண்டு சென்னை சங்கமம் விழாவை, கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் ஆலய திடலில் மு க ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு துவங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள முக்கிய 18 இடங்களில் இன்று முதல் வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதேபோல் நாட்டுப்புற கலைகளை நினைவு கூறும் விதமாக 1500க்கும் மேற்பட்டோர் கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பலா மேளம், பழங்குடியினர். கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கேகே நகர், வளசரவாக்கம் உட்பட 18 இடங்களில் நாளை அதாவது 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்