காலையில் ஷாக்.. என்கவுண்டரில் கொல்லப்பட்ட காக்காதோப்பு பாலாஜி.. 59 வழக்குகளுடன் வலம் வந்தவர்!

Manjula Devi
Sep 18, 2024,10:41 AM IST

சென்னை:   சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல  ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் இன்று காலையில் என்கவுண்டர் செய்தனர்.


சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள வள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் ராமலிங்கம். அவரது மகன்தான் 36 வயதாகும் பாலாஜி. காக்காதோப்பு பாலாஜி என்று அழைப்பார்கள். இவர் முதலில் சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்டு பின்னர் பெரிய ரவுடி ஆனார். பல்வேறு கொலை, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இவருக்குத் தொடர்பு உள்ளது. 




சென்னையில் பெட்ரோல் குண்டு வீசியது உட்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியும் கூட. இவர் மீது இதுவரை 5 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள், ஆள் கடத்தல் வழிப்பறி என மொத்தம் 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இது தவிர அவர் மீது 12 முறை  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அதேபோல் சிறையில் இருந்து கொண்டே கூலிப்படைகளை ஏவி பல்வேறு கொலைகளை செய்ததும் தெரிய வந்துள்ளது.


சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் சம்பவம் செந்திலுக்கு எதிர் கோஷ்டியில் இருந்தவர் ரவுடி பாலாஜி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை இன்று அதிகாலை 4:30 மணி அளவில் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 


போலீசாரை தாக்க முயன்ற போது தற்காப்புக்காக அவரை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்