விட்டு விட்டு வெளுக்கும் கன மழை.. மாமல்லபுரம் முதல் சென்னை வரை.. நாளை வரை தொடரும்!

Su.tha Arivalagan
Nov 14, 2023,07:32 PM IST

சென்னை: வடக்கு கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையானது நாளை காலை அல்லது பிற்பகல் வரை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அதேசமயம், இன்று உள்ளது போல இல்லாமல், நாளைய மழையானது சற்று வலுவிழந்து காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


வட கிழக்கு பருவ மழை முதல் முறையாக கடலோர மாவட்டங்களில் அடித்து வெளுத்து விளையாடி வருகிறது. நாகப்பட்டனம் முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.




நாகை மாவட்டத்தில்தான் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை தொடர்கிறது. தலைநகர் சென்னையிலும் காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், வடக்கு கடலோர மழை சென்னையிலும் வலுவாக பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணிக்கு மேல் சென்னையில் மழையின் வேகம் அதிகரித்தது.  


விட்டு விட்டு  பெய்து வந்தாலும் பெய்யும் மழை கன மழையாக இருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை பெல்ட்டுக்கு மேலே அதிக அளவிலான மேகக் கூட்டங்கள் நுழைந்துள்ளன. இதனால் நாளை காலை வரை இந்த கன மழையானது தொடரும்.




விட்டு விட்டு கன மழை பெய்யும். இருப்பினும் இன்றைய மழையைவிட நாளைய மழை சற்று வலுவிழந்து காணப்படும். அடர்த்தி குறைந்திருக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன். இந்த மழையானது நாளை பிற்பகல் அல்லது மாலை வரை தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புயல் வேகத்தில் மாநகராட்சி




இதற்கிடையே, சென்னை மாநகரில் மழை வெள்ளம் தேங்காத வகையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். மழை நீர் இதுவரை பெரிய அளவில் எங்குமே தேங்கவில்லை என்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. அதேசமயம், கிண்டி  உள்ளிட்ட சில இடங்களில் கடந்த முறை தண்ணீர் தேங்கியதால் இந்த முறை அந்தப் பாதிப்பு வராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


மழை நீர் வடிகால் பணிகளை மாநகர மேயர் பிரியா மற்றும் ஆணையாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். மேலும்  பேரிடர் கண்காணிப்பு மையமும் இரவு பகலாக பணியாற்றி வருகிறது. அந்த மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.