Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னை: சென்னையில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு 830 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தமிழ்நாட்டின் நோக்கி நகரும் வேகம் அதிகரித்து உள்ளதால் வடகடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சென்னைக்கு 28ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை பாரிமுனை, எம்ஜிஆர் நகர், மந்தவெளி, பட்டினப்பாக்கம், எழும்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கம், ஆலந்தூர், நந்தனத்தில் தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. புறநகர்ப் பகுதிகள் சிலவற்றில் கன மழையாகவும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் போக முடியவில்லை.
டிசம்பர் 1ம் தேதி வரை மழை இருக்கு
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கன மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். குறிப்பாக சென்னையில் நவம்பர் 27ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் அதிகரித்து டிசம்பர் ஒன்றாம் தேதி வரை மழை நீடிக்கும்.
இன்றுதான் சென்னைக்கான மழை தொடங்கியுள்ளது. இது தொடரும். சென்னைக்கு கீழேதான் காற்றழுத்தம் கடக்கப் போகிறது. எனவே நமக்கு அது கடந்து போகும் வரை நல்ல மழை கிடைக்கும். எனவே அடுத்து வரும் நாட்களில் கன மழை, மிக கன மழையை சென்னை எதிர்பார்க்கலாம். அருகாமை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கும் மழை உண்டு. ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.
பாலத்துக்கெல்லாம் காரைத் தூக்கிட்டுப் போகாதீங்க
உடனே பாலத்துக்கு மேலே கொண்டு போய் கார்களை நிறுத்தணுமா, சூப்பர் மார்க்கெட்டுகளுக்குப் போய் வாங்கி குவிக்கணுமா அப்படின்னு கேட்காதீங்க. நான் அது மாதிரியெல்லாம் அட்வைஸ் பண்ண மாட்டேன். பண்ணியதும் கிடையாது. சென்னைக்கு இப்போது நிறைய மழை தேவை. அப்போதுதான் நமது குடிநீர் ஏரிகள் நிரம்பும். எல்லாமே பாதி அளவுக்கு மேல்தான் உள்ளன. 2025 கோடைகாலத்தில் நமக்குப் பிரச்சினை வருமான்னு கேட்காதீங்க.. நிச்சயம் வராது. காரணம் நமக்கு நல்ல மழை நாட்கள் இனி இருக்கிறது. இந்த மழையிலேயே நமக்கு நிறைய தண்ணீர் கிடைக்கும். எனவே நம்பிக்கையோடு இருப்போம்.
தென் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. ராமநாதபுரத்திற்கு கிடைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
காற்று இருக்காது.. கன மழை மட்டுமே
இந்த காற்றழுத்தமானது இலங்கையில் கரையைக் கடக்காது. காரணம் அங்குள்ள மலைகள் மற்றும் இலங்கை அமைந்துள்ள பூகோள ரீதியிலான தோற்றம் காரணமாக எப்போதுமே புயல்களும், காற்றழுத்தங்களும் இலங்கையை விட்டு நம்மை நோக்கித்தான் வரும். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், சென்னை கடலோர மாவட்டங்களுக்குத்தான் அவை வரும். இப்போதும் அப்படியே நடக்கிறது. அதேசமயம், இலங்கையின் வடக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் மிக கன மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த மழையால் காற்று பிரச்சினை வராது. காரணம் காற்று அதிகம் இருக்காது. அதி கன மழை மட்டுமே பிரச்சினையாக இருக்கும். எனவே தென்னை மரக் கிளைகளை வெட்டுகிறேன் என்று டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என்று அவர் கூறியுள்ளார்.
பகல் 1 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்:
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி,திருவள்ளூர்,செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய 16 மாவட்டங்களில் இன்று பகல் ஒரு மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடல் சீற்றம்:
காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நெருங்கி வரும் நிலையில் தற்போது சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்