பொத்துக்கிட்டு ஊத்திய வானம்.. செம மழையை சந்தித்த சென்னை.. 200 ஆண்டுகளில்..  23 முறை!

Su.tha Arivalagan
Dec 07, 2023,06:13 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை நகரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டது கன மழை.. இது சென்னைக்குப் புதிதில்லை.. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மழைக்காலம் என்றாலே நரகமாகி விட்டது.. அந்த வகையில் கன மழை, பேய் மழை, அடை மழை எல்லாம் சென்னைக்கு ரொம்பப் பரிச்சயமானதுதான். 


கடந்த 200 ஆண்டுகளில் சென்னை மாநகரம்  23 முறை, மிக மிக அதீத மழைப்பொழிவை சந்தித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். இதில் மூன்று ஆண்டுகளி, ஒவ்வொரு ஆண்டும் தலா 2 முறை அதிக அளவிலான மழைப்பொழிவு கிடைத்துள்ளது.


இந்தியாவின் நான்காவது பெரு நகரமான சென்னைக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன.. அடையாளங்கள் உள்ளன. தென்னிந்தியாவின் டெட்ராய்ட், மெரீனா கடற்கரை, ரிப்பன் பில்டிங், கோலிவுட்.. என ஏகப்பட்ட அடையாளங்கள்.. அந்த அடையாளங்களில் ஒன்றுதான் "சென்னை மழை மற்றும் சென்னை வெள்ளம்". தமிழ்நாட்டில் பெரிய மழை வந்தாலே உடனே எல்லோரும் போய் தேடுவது சென்னையில் மழை வந்துருச்சா.. வெள்ளம் வந்துருச்சா என்றுதான். அந்த அளவுக்கு சென்னையில் மழை என்பது பரபரப்பான ஒன்றாக மாறி விட்டது.




பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள் இல்லையா அதுபோல.. எதைப் பார்த்தும் பயப்படாத சென்னைக்காரர்கள் கன மழை வந்து விட்டால் போதும் அச்சச்சோ ஓடுடா ஓடுடா என்று ஓடி ஒளியும் அளவுக்கு மழை அச்சுறுத்தலாக மாறி விட்டது. சென்னை மாநகரம் புயல் மழை  வெள்ளத்தால் அவ்வப்போது பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு பல நாட்கள் ஆகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.


தற்போது வங்கக்கடலில் உருவான மிச்சாங்  புயலால் சென்னை மாநகரமே பேரழிவை சந்தித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பால் ,உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லை. மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது .

இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்தது சென்னை மாநகரம்.


கடந்த 200 வருட கால மழை வரலாற்றைப் பார்த்தால் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மால் அறிய முடிகிறது. இதற்கு முன்பு சென்னை 3 முறை பேரழிவையும், பெருமழையையும் சந்தித்துள்ளது.


அதிகபட்ச மழை அளவானது, 1846ம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பதிவாகியுள்ளது. அப்போது 550 மி.மீ பெரு மழையை சந்தித்தது சென்னை.


1857 அக்டோபர் 24 இல் 460 மிமீ மழையும்,1976ம் ஆண்டு 452 மிமீ மழையும் பெய்துள்ளது. 1996ம் ஆண்டு ஜூன் 14ல் 347 மி மீ மழையும் ,1985 நவம்பர் 329 மி மீ மழையும் பெய்துள்ளது.


2015, 2021 ,மற்றும் 2023 ஆகிய  மூன்று ஆண்டுகளில் தலா 2 முறை அதிக அளவிலான மழை பொழிவை சந்தித்துள்ளது.


1984 ஆம் ஆண்டு 294 மிமீ மழையும், 1969இல் 280 மிமீ, 2005இல் 273 மிமீ ,1901 ஆம் ஆண்டு 262 மிமீ மழையும், 1985 இல் 249 மிமீ மழையும் சந்தித்துள்ளது.


1984ஆம் ஆண்டு 246  மிமீ மழையும், 1952 ஆம் ஆண்டு 244 மிமீ மழையும் ,1922 ஆம் ஆண்டு 236 மி மீ மழையும், 2005 ஆம் ஆண்டு 234 மிமீ மழையும் ,1902 ஆம் ஆண்டு 233 மிமீ மழையும், 1943 இல் 215 மி மீ மழையும், 1978இல்  203 மிமீ மழையும் பெய்தது.


இந்த வருடம் சென்னை இரண்டு முறை அதீத கனமழையை சந்தித்தது குறிப்பிடத்தக்கதாகும். அதிலும் இந்த டிசம்பரில் பெய்த மழையின் மூலம் இந்த ஆண்டு 2000 மில்லி மீட்டர் மழையைப் பெற்றுள்ளது சென்னை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.