வட கிழக்கு பருவமழை தீவிரமாகவே இருக்கும்.. 2 நாட்களுக்கு அதி கன மழை இருக்கு.. வெதர்மேன் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமாகவே இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை திருவள்ளூர் விழுப்புரம் கோவை மதுரை கள்ளக்குறிச்சி தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. கன மழை பெய்த போதும் இரவு விடிய விடிய தற்போது வரை மிதமான மழை பெய்ய வருகிறது. இதனால் வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே தமிழக உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தெற்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை கன முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வரக்கூடிய நாட்களில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும்.தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இன்று வரை 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வட தமிழ்நாட்டில் மேகதிரள் சூழ்ந்துள்ளதால் சென்னையில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்யும். வருகின்ற நாட்களில் வடக் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நெருங்கி வரும். நெருங்கி வரும் போது வட கடலோரப் பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளான நெல்லூர், மற்றும் புதுச்சேரி, விழுப்புரம் கடலோரப் பகுதிகளான மரக்காணம் திருவள்ளூர் பகுதிகளில் 16, மற்றும் 17 தேதிகளில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இனி வரும் நாட்களில் வட தமிழக வடகடலோர மாவட்டங்களில் பதினாறு மற்றும் 17ஆம் தேதி களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இரவு நேரம் அல்லது காலை நேரங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு பகுதி வலுமடைந்த பிறகு தென் மாவட்டங்களில் மழை அளவு படிப்படியாக குறைந்து விடும்.
வட உள் மாவட்டங்களில் அதாவது திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, போன்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 14 முதல் 18ஆம் தேதி வரை கடல் சீற்றம் அதிகமாகவே இருக்கும். அப்போது 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
16 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்:
இதற்கிடையே, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அக்டோபர் 16ஆம் தேதி அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பேரிடர் மீட்புப் படையினர் வருகை
சென்னைக்கு ரெட் வரும் 16ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நெல்லையிலிருந்து சென்னைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். சென்னையில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மூன்று குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஆறு குழுக்கள் சென்னைக்கு விரைகின்றனர். அதேபோல் திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுப்பாளையத்தில் 3 குழுக்கள் என தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் என ஒன்பது குழுவிற்கும் 450 வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால்,கடந்த வருடத்தை விட இந்த வருடம் மழைப்பொழிவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர். அதேபோல் மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்