22ம் தேதி உருவாகப் போகும்.. காற்றழுத்த தாழ்வால்.. நமக்கு பெரிய மழைக்கு வாய்ப்பிருக்கா?

Manjula Devi
Oct 18, 2024,11:49 AM IST

சென்னை:   வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டிற்கு மழைக்கு வாய்ப்பு குறைவு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்கக் கடலில் ஏற்கனவே உருவான குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக அதிக கன மழை வரை கொட்டி தீர்த்தது. இதனை தொடர்ந்து இந்த குறைந்த காற்றழுத்த பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும், அதனால் வட தமிழகத்திற்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி கரையை கடந்தது. 


இதனால் வட தமிழகம் பகுதிகளான சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள சூழலில் மீண்டும் லேசான மழை சென்னையை நனைத்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்துள்ளது. 




இதற்கிடையே வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின்  மழை நிலவரம் எப்டி இருக்கும், நமக்கு பெரிய மழை இருக்கா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


பெரிய மழைக்கு வாய்ப்பில்லை


வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வடக்கு அந்தமான் அருகே இந்தோ-சீனாவில் இருந்து வரும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பற்றி கவலைப்பட வேண்டாம்.  அந்தமான் கடலுக்குள் நுழையும் போது நமது சென்னை அட்சரேகைக்கு மேலே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாத பட்சத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி தள்ளப்படும். பெரும்பாலும் இது தீவிரமடைந்து மேலே செல்லும். இதனால் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு வாய்ப்பு கிடையாது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. 


நவம்பரில்தான் கச்சேரி இருக்கு


நவம்பர் மாதத்திற்கு மேல் தமிழகத்திற்கு நிறைய மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளான சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் சனிக்கிழமை அதாவது நாளை காலை வரை பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் தமிழ்நாடு வெதர்மேன்  தெரிவித்துள்ளார்.


அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வட கிழக்குப் பருவ மழை இந்த முறை பெரிய மழையுடன் ஆரம்பித்துள்ளது. ஆனால் அக்டோபர் இறுதி வரை நமக்கு வேறு பெரிய மழை இருக்காது என்றே கருதப்படுகிறது. அதேசமயம், நவம்பரில் அதிக மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறுவதால் இப்போதைக்கு, பெய்யும் மழையை ஜாலியாக என்ஜாய் செய்வோம்.. வீட்டுக்கு முன்னாடி தண்ணி தேங்குச்சுன்னா கப்பில் விட்டும் விளையாடுவோம்.. ரொம்ப குளிருச்சுன்னா சூடா வடை சாப்பிடுவோம்.. அப்புறம் இருக்கே இருக்கு இளையராஜா பாட்டு.. இதுக்கு மேல என்னங்க வேணும்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்