"மீசைக்கார நண்பா".. அந்தக் குட்டி பாப்பாவைத் தூக்கிட்டு வந்தாரே அவர்தான்.. சபாஷ் தயாளன் சார்!
சென்னை: சென்னை பெரு வெள்ள நிவாரணப் பணிகளின்போது அத்தனை பேரின் இதயங்களையும் ஒரு போட்டோ கொள்ளையடித்துக் கொண்டு போனது. அத்தனை பேரின் வேதனையும் அந்த ஒரு போட்டோவில் துடைத்தெறியப்பட்டது. அந்தப் போட்டோவில் இருந்தவர்தான் தயாளன்.
முட்டி அளவுக்கு உள்ள தண்ணீரில் ஒரு தோளில் பையும், இரு கைகளிலும் ஒரு குட்டிப் பாப்பாவையும் சுமந்து கொண்டு ஜம்மென்று நடந்து வந்தார் தயாளன். தன்னைத் தூக்கிக் கொண்டு செல்லும் தயாளனின் முகத்தைப் பார்த்தபடி வந்த குழந்தைக்கு சிரிப்புக் காட்டிக் கொண்டே வந்த தயாளன் மொத்த தமிழ்நாட்டின் உள்ளங்களையும் அள்ளிக் கொண்டு விட்டார்.
எத்தனையோ செய்திகளை இந்த ஒரு போட்டோ வெளிப்படுத்தியது. யார் இந்த "மீசைக்கார நண்பா" என்று அத்தனை பேரும் விழுந்து விழுந்து இவரைப் பற்றி விசாரித்தனர்.
தயாளன், வெள்ளம் பாதித்த துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து ஏகப்பட்ட பேரை மீட்க உதவியுள்ளார். அப்படி அவர் மீட்டு வந்ததுதான் அந்தக் குட்டிப் பாப்பா. அந்த புகைப்படம் வைரலானது. இதயங்களை நனைத்தது. பலரை அழ வைத்தது.
எந்த சுயநலமும் இல்லாமல், தன்னலம் பார்க்காமல், அமைதியாக தனது பணியைப் பார்த்த அந்த தயாளன்தான் உண்மையான ஹீரோ.. அத்தனை பேருக்கும் முன்னுதாரணம். தயாளனின் இந்த சேவையைப் பார்த்து வியந்த காவல்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், தயாளனை நேரில் அழைத்துப் பாராட்டிக் கெளரவித்தார்.
தயாளன் சார்.. உங்க கையில் இருந்தது குழந்தை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த சென்னையின் நம்பிக்கையும்தான்.. எங்களோட பாராட்டையும் வாங்கிக்கங்க.. சல்யூட் சார்!