"பொது வெளியில் இதெல்லாம் செய்யக் கூடாது".. போலீஸ் சொல்வதைக் கேளுங்க பாஸ்!

Su.tha Arivalagan
Nov 23, 2023,08:52 AM IST

சென்னை: பொது வெளியில் அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சத்தம் போடுவது, பாட்டு கேட்பது போன்றவற்றை தண்டனைக்குரிய குற்றம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


பஸ்களிலோ அல்லது ரயிலிலோ போகும்போது எல்லோருக்குமே இதுபோன்ற அனுபவம் தினசரி ஒரு முறையாவது கிடைக்கும்.. யாரோ ஒருவர் யாரோ ஒருவரிடம் சத்தம் போட்டு செல்போனில் பேசிக் கொண்டிருப்பார்.. அவர் பேசுவது எதிர் முனையில் இருப்பவருக்கே நேரடியாகவே காது கேட்கும் அளவுக்கு காது "ஜவ்வு" கிழியும் அளவுக்கு இவர் கத்திப் பேசிக் கொண்டிருப்பார்.


இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. வார்த்தைக்கு வார்த்தை "த்தா" வார்த்தை போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். எதுக்குத்தான் அதைச் சொல்கிறார்களோ என்று கடுப்பாகும் அளவுக்கு, காது கூசும் அளவுக்கு ஆபாசம்.. வழுக்கிக் கொண்டிருக்கும்.




இதாவது பரவாயில்லை.. சிலர் செல்போனில் ஹெட்போனோ அல்லது இயர்போனோ எதுவுமே மாட்டாமல் சத்தமாக பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.. பக்கத்தில் இருப்பவருக்கு அது அசவுகரியமாக இருக்குமா என்று யோசிப்பதெல்லாம் கிடையாது.. அப்படிப்பட்ட இசை வெறியர்களை நிறையவே பார்க்கலாம்.


இப்படிப்பட்ட பேச்சாளர்களுக்கு சென்னை காவல்துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறை கூறுகையில், பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட. நீங்கள் சாதாரணமாக நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கலாம்.


பொது வெளியில் அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, பாடல் பாடுவது, ஒலிக்கச் செய்வது, தகாத வார்த்தைகள் பேசுவது மற்றும் ஒழுங்கீனமான எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றம். மூன்று மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.. கவனமாக இருங்கள் என்று சென்னை காவல்துறை அன்புடன் எச்சரித்துள்ளது.


என்ன பாஸ்.. "ஓட்டை வாயரா" நீங்க.. கொஞ்சம் கவனமா இருங்க இனிமேல்!