"குடிமகன்களே.. பெரும் குடி மகன்களே".. 3 மாதத்தில் ரூ. 10 கோடி அபராதம் கலெக்ஷன்!
Apr 26, 2023,09:50 AM IST
சென்னை: சென்னை நகரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து ரூ. 10 கோடி அளவுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில்வாகனம் ஓட்டுவோரை இப்போது வளைத்து வளைத்து சென்னை போலீஸார் பிடித்து அபராதம் போட்டு வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரால் பல்வேறு விபத்துகள் நடப்பதால் இந்த அதிரடி நடவடிக்கை.
ஜனவரி மாதம் இதுதொடர்பாக சிறப்பு நடவடிக்கையில் சென்னை போக்குவரத்துக் காவல்துறை ஈடுபட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியோரிடமிருந்து ரூ. 10.49 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10,134 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
கடந்த வாரம் மட்டும் 788 நிலுவையில் இருந்த வழக்குகள் தீர்வு காணப்பட்டன. ரூ. 81.9 லட்சம் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
குடித்து விட்டு வாகனம் ஓட்டி பிடிபட்டு அபராதத் தொகையை கட்ட மறுப்போரின் வாகனங்கள், கோர்ட் வாரண்ட் மூலம் ஜப்தி செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இதுவரை இதுபோன்ற அபராதம் கட்ட மறுத்தோரின் வாகனங்களை ஜப்தி செய்ய 371 வாரண்ட்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.