பாஜக தலைவர் அண்ணாமலை, பீகார் பாஜக மீது போலீஸ் வழக்கு
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வட இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பாக வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து வட இந்தியாவில் சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். இந்த வதந்தி தேசிய அளவில் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷமத்தனமான வதந்தியை உண்மை என்று நம்பிய தமிழ்நாட்டில் அமைதியான சூழலில் வசித்து வரும் வட இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹோலி பண்டிகைக்காக பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில், கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். இதையும் விபரீதமாக திருப்பி விட்டனர் விஷமிகள். தமிழ்நாட்டில் வசிப்பதற்குப் பயந்தே சொந்த ஊர்களுக்கு அவர்கள் செல்வதாக வதந்தி கிளப்பினர்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு இதுதொடர்பாக வீடியோ மூலம் ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதில் வட இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், தகவல்கள் அனைத்துமே பொய்யானவை, வதந்திகளே. இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் அதில் கூறியிருந்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் நீண்டதொரு விளக்கத்தையும் அவர் வெளியிட்டார். அதில் பிற மாநிலத் தொழிலாளர்களும், தமிழ்நாட்டு தொழிலாளர்கள்தான. அவர்கள் நம்முடைய சகோதரர்கள். அவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்களைப் பாதுகாப்பது எங்களது கடமை. புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் குறித்து விஷமத்தனமாக வதந்தி பரப்புவது தேச விரோத செயல். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து டெய்னிக் பாஸ்கர் என்ற இந்தி பத்திரிகையின் ஆசிரியர், தன்வீர் அகமது என்ற இன்னொரு பத்திரிகையாளர், பிரஷாந்த் உம்ரா என்ற உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் வழக்குப் பாய்ந்துள்ளது.
அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீஸார், 153, 153 ஏ (1) (ஏ), 505 (1) (பி), 505 (1) (சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல பீகார் பாஜக டிவிட்டர் பக்கத்தைப் பராமரிப்பவர் மீதும் 153, 153ஏ (1)(ஏ), 505 (1) (பி), 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் மீது வழக்குப் பாய்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பும் கூடியுள்ளது.