2 அவதூறு வழக்குகளில்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ எச். ராஜாவுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனை

Su.tha Arivalagan
Dec 02, 2024,11:30 AM IST

சென்னை: பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியதற்காகவும், திமுக எம்.பி கனிமொழியை அவதூறாகப் பேசியதாகவும் எம்.பி எம்எல்ஏக்கள் கோர்ட்டில் தொடரப்பட்ட 2 வழக்குகளில் பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான எச். ராஜா குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும் தலா ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கனிமொழிக்கு எதிராக தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்கிடமான பதிவைப் போட்டிருந்தார் எச். ராஜா. மேலும் அதே ஆண்டு மார்ச் 6ம் தேதி தந்தை பெரியார்  சிலைகளை உடைப்பேன் என்றும் பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் எச். ராஜா. 




ஆனால் அங்கு அவரது மனு தள்ளுபடியானது. மேலும் வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் பல்வேறு ஊர்களில் இதுதொடர்பாக பதியப்பட்ட வழக்குகளை மூன்றாக பிரித்து ஒரு வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கும்,  2 வழக்குகளை சென்னையில் உள்ள எம்.பி. எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கும் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.


இதில் சென்னை வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று இரு வழக்குகளிலும் தலா 6 மாத சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்