தயவு செய்து கண்ட இடத்திலும் "துப்பாதீங்க"..  சுத்தபத்தமா இருங்க.. மெட்ரோ எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Dec 22, 2023,05:17 PM IST

சென்னை: பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில்தான் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் பலரும் எச்சில் துப்புவார்கள்.. இப்போது இப்படிப்பட்டவர்களால் சென்னை மெய்ரோ ரயில் நிலையங்களும் அசுத்தமடைய ஆரம்பித்துள்ளன.


குறிப்பாக பான் பராக் போட்டுக் கொண்டு ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் எச்சில் துப்பி அந்த இடத்தையே ரணகளமாக்கி வைத்திருப்பார்கள்.  இடம் பொருள் ஏவல் என்று பார்க்காமல் கிடைக்கும் இடத்தில் எல்லாம் துப்புவது சிலருக்கு பொழுது போக்காகி விட்டது. பஸ்ஸை விட்டு இறங்கி விட்டால் போதும்.. உடனே நின்ற இடத்திலேயே துப்புவது சிலருக்கு ஹாபியாக உள்ளது.


பஸ் நிலையங்களின் சுவர்கள், பஸ் ஸ்டாப் சுவர்கள்,. பிளாட்பாரங்கள், கழிப்பறைகள் என எங்கு பார்த்தாலும்

இப்படிப்பட்ட அசுத்தங்களை அதிக அளவில் காணலாம். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இப்படிப்பட்டவர்கள் அசுத்தப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.




மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை. அனைத்து இடங்களும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளவை. இதனால் பயணிகள் குறிப்பாக பெண்கள் எந்தப் பயமும் இல்லாமல் இங்கு வந்து செல்கிறார்கள். இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான, சுத்தமான, வசதியான மெட்ரோ நிலையமாக சென்னைதான் உள்ளது.


இந்த நிலையில் சமீப காலமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் எச்சில் துப்பி பலர் அசுத்தப்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோல எச்சில் துப்பவது குற்றச்  செயலாகும்,  தண்டனை கொடுக்கப்படும். ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் என்று அது கூறியுள்ளது.


"புளிச்" என துப்பும் முன்பு ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் மெட்ரோ ரயில் நிலையங்கள் "பளிச்" என இருக்கும்... துப்புவோரே.. சிந்தியுங்கள்!