44 புறநகர் ரயில்கள் இன்று ஓடாது.. No tension.. கை கொடுக்க கூடுதல் ரயில்களை இறக்கிய சென்னை மெட்ரோ!

Su.tha Arivalagan
Feb 18, 2024,11:53 AM IST

சென்னை: சென்னையில் இன்று பொறியியல் பணி காரணமாக சென்னை தாம்பரம், பீச், அரக்கோணம் மார்க்கத்தில் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் ரயில்களை சென்னை மெட்ரோ நிர்வாகம் இயக்குகிறது.


சென்னையில் புறநகர் ரயில் சேவையில் அடிக்கடி மின்சார மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. வார நாட்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


அந்த வகையில் இன்றும் சென்னை பீச் - தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களை சரி செய்ய சென்னை மெட்ரோ நிறுவனமும், மாநகர போக்குவரத்துக் கழகமும் களம் இறங்கியுள்ளன. 




சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல மெட்ரோ நிறுவனமும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


ப்ளூ மற்றும் கிரீன் லைன் மார்க்கத்தில் வழக்கமாக பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை இரு மார்க்கத்திலும், 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும். இன்று மட்டும் காலை 10 மணியிலிருந்தே இந்த சேவை தொடங்கும்.


இதுதவிர காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலும், 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.


இதற்கிடையே, சென்னை தாம்பரத்திலிருந்து ஏர்போர்ட் மெட்ரோ நிலையத்துக்கும், மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்துக்கும் சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்டிரல், விம்கோ நகர் மெட்ரோ ரயில்களில் பயணித்து தாங்கள் போக வேண்டிய இடத்துக்கு மக்கள் தங்கு தடையின்றி செல்ல முடியும்.