சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. மேலும் 41 எஸ்கலேட்டர்கள் ஆன் தி வே!
Mar 19, 2023,10:11 AM IST
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளதாக சிஎம்ஆர்எல் அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் புதிய போக்குவரத்து நண்பனாக மாறியுள்ள மெட்ரோ தற்போது படு வேகமாக சென்னை போக்குவரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. மெட்ரோ சேவைகள் ஆரம்பித்த புதிதில் இதை யாருமே பெரிதாக நாடவில்லை. வேடிக்கை பார்க்க மட்டுமே பலரும் வந்தனர். ஆனால் இன்று சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது மெட்ரோ.
மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. கதவு மட்டும் இல்லாவிட்டால் புட்போர்ட் அடிக்கும் அளவுக்கு பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு கூடுதல் வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்ய ஆரம்பித்துள்ளது.
முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் எஸ்கலேட்டர்களை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி புதிதாக 41 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சராசரியாக 6 எஸ்கலேட்டர்கள் இருக்கும்.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தினசரி சராசரியாக 2.45 லட்சம் பயணிகள் புழங்குகின்றனர். இவர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்ய ஆரம்பித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
சின்னமலை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, நேரு பூங்கா, அண்ணா நகர் கிழக்கு, புனித தாமஸ் மலை ஆகிய ரயில் நிலையங்களில் தலா ஒரு எஸ்கலேட்டர் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது.
இதுதவிர நங்கநல்லூர் சாலை, கிண்டி, நந்தனம், ஏஜிடிஎம்எஸ், தியாகராயர் கல்லூரி, எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்களில் தலா 2 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளன. அண்ணாம நகர் டவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 3 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளன.
வடபழனி, மீனம்பாக்கம் ரயில் நிலையங்களில் தலா 4 எஸ்கலேட்டர்களும், திருமங்கலம் மெட்ரோ நிலையத்தில் 5 எஸ்கலேட்டர்களும் அமைக்கப்படவுள்ளன என்று சிஎம்ஆர்எல் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.