வெளில சூப்பரா மழை பெய்யுது.. பேசாம மெட்ரோ ரயிலைப் பிடிங்க.. இதான் ஷெட்யூல்.. Pl note!

Su.tha Arivalagan
Oct 15, 2024,10:53 AM IST

சென்னை:   சென்னை  நகரிலும் புறநகர்களிலும் காலை முதல் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடி மின்னலுடன் பலத்த மழை பெய்வதால் சாலைப் போக்குவரத்து பல பகுதிகளில் முடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது.


தமிழ்நாடு முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நான்கு நாட்களுக்கு கன மழை தொடரும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே கணித்தபடி நேற்று இரவிலிருந்தே கன மழை தொடங்கி விட்டது. விட்டு விட்டு பெய்து வந்த மழை இன்று காலைக்கு மேல் விடாமல் பெய்ய ஆரம்பித்துள்ளது.




நகரிலும், புறநகர்கள் பலவற்றிலும் பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டிக் கொண்டுள்ளது. இதனால் சாலைப் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் அதிக அளவில் மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் ரயில்களை இன்று இயக்கி வருகிறது.


காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வழக்கமாக 42 ரயில்கள் இயக்கப்படும். இன்று கூடுதலாக 5 ரயில்கள் இயக்கப்படுவதால் மொத்தம் 47 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


கிரீன்லைனில் (புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் மெட்ரோ முதல் புனித தாமஸ் மலை  மெட்ரோ வரை) - ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. 


ப்ளூ லைனில் (விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை) - ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.


வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் - அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை - ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.


வெளியில் சென்றே ஆக வேண்டிய நிலையில் இருப்போர் பாதுகாப்பான முறையில் தங்களது பயணங்களை மெட்ரோவில் மேற்கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்