ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றங்களை அறிவித்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்.
நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகியவை நாளை கொண்டாடப்படவுள்ளன. அடுத்த நாள் அதாவது அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் தங்களது ஊர்களுக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.
மக்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
10ம் தேதி, இன்று, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பீக் அவரின்போது அதாவது காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இரவு 10 மணி முதல் 11 மணி வரை வழக்கமாக 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதற்குப் பதிலாக இன்று 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை தினத்தில்
ஆயுத பூஜை தினமான நாளை, சனிக்கிழமை அட்டவணை அமல்படுத்தப்படும். அதன்படி காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
5 மணி முதல் 8 மணி வரை, 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் 8 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்