Happy News: சென்னையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Manjula Devi
Oct 16, 2024,10:18 AM IST

சென்னை: சென்னையில் இன்று அதி கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையைக் கடக்க உள்ளதால் சென்னையில் அதிக கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு பருவமழை நேற்று தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக வங்க கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  நேற்றும் இன்றும் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது. 


நேற்று சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பிற மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. ஓரிரு இடங்களில் 30 செமீட்டரையொட்டி மழை வெளுத்துக் கட்டியிருந்தது. இந்த நிலையில், நேற்றை விட இன்று கனமழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மழை குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:


வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே  வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று 20 சென்டிமீட்டர் மேல் மழைப்பொழிவு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது காற்றழுத்த தாழ்மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி நகர ஆரம்பித்திருப்பதால், சென்னையில் அதிக கன மழைக்கான வாய்ப்பு குறைந்தது. 


வடசென்னை பகுதிகளான திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல்  தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. தென் சென்னை பகுதிகளில் ஒரு சில இடங்களில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் மட்டும் இரண்டு நாட்களில் சில இடங்களில் சுமார் 30 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மேகத்திரள்கள் தமிழ்நாட்டில் அருகே வந்ததால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் அதிக கன மழை பெய்தது. தற்போது இந்த மேகத் திரள்கள் தெற்கு ஆந்திரா பகுதியில் சூழ்ந்துள்ளது. அதனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா பகுதியில் கடையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் நாம் எதிர்பார்த்தபடி இன்று 20 சென்டிமீட்டருக்கு மேல் அதி கனமழை  பெய்ய வாய்ப்பு இல்லை. சென்னையில் வழக்கமான மழை தொடரும். ஆனால் அதிக கன மழைக்கான வாய்ப்பு குறைவு.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே தான் இருக்கிறது. அதனால் மழை விட்டு விட்டு பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழையே இருக்கும். பெருமழைக்கு வாய்ப்பு குறைவு. சென்னையில் மிதமான மழை பெய்யும். ஆபத்து இல்லை என கூறியுள்ளார்.


மழை தொடரும்


சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை தொடரும். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்  மழை பெய்ய வாய்ப்புள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எண்ணூரில் 17 செமீ மழை பதிவாகி உள்ளது. அதேபோல் வில்லிவாக்கத்தில் 16 சென்டிமீட்டர், அண்ணா பல்கலைக்கழகம் 15 சென்டிமீட்டர், நந்தனம் 13 சென்டிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர், மீனம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணையில் தலா 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


சென்னை டூ மதுரை விமானம் ரத்து


சென்னையில் தற்போது மிதமான மழை பெய்து வரும் நிலையில் விமானங்களை இயக்க சாதகமான சூழலில் நிலவாததால் இன்று ஆறு விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து மதுரை, சேலம், சீரடிக்கு செல்லும் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று இரவே மழை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது லேசான சாரல் மழை போல சில இடங்களிலும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்கிறது. பெருமழைக்கான வாய்ப்பு குறைந்து விட்டதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்