இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. காளிகாம்பாள் கோவில் பூசாரி அதிரடி கைது

Meenakshi
May 28, 2024,01:23 PM IST

சென்னை:  இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கைது செய்யப்பட்டார்.


சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி. இவர் மீது சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


அந்த புகாரில், சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர், அந்த கோவிலுக்கு நான் சென்றபோது என்னுடன் நட்பாக பழகி, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார் என்று கூறியிருந்தார்.




இதையடுத்து கார்த்திக் முனுசாமி பூசாரி பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.தனிப்படை அமைத்து கார்த்திக் முனுசாமியை தீவிரமாகத் தேடி வந்தனர். பூசாரி வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திற்கு தப்பிச் சென்று விடாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கார்த்திக் முனுசாமி தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தான் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்றும், இது தொடர்பான வழக்கில் போலீசார் மெத்தனமாக இருப்பதாக கூறி, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்தப் பின்னணியில், கார்த்திக் முனுசாமிக்கு சம்மன் கொடுத்து வரவழைத்து போலீசார் விசாரணை நடந்தி, தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.