சென்னையில் வெறும் காற்றுதான் வீசுது.. மழை இல்லை.. பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று லீவு!

Manjula Devi
Nov 27, 2024,11:03 AM IST

சென்னை: நாகை மயிலாடுதுறை திருவாரூர் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்களில் கன மழை தொடர்வதால் இன்று 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 




இதனால் அப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. 


திருவாரூர் மழை:


குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 12 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் இன்றும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடர் கன மழை பெய்து வருவதால் அங்கு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


மேலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடியிலிருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு 25 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். 


நாகை மழை:


அதேபோல் நாகை மாவட்டத்திலும் நேற்று முழுவதும் விட்டுவிட்டு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் அப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது.குறிப்பாக நாகூர், சிக்கல், காடாம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 160 மில்லி மீட்டர் வரை மழை கொட்டி தீர்த்துள்ளது. தற்போது நாகை மாவட்டம் முழுவதும் மழையின் வீரியம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 


இது தவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியால் கடல் அலைகள்  மிக வீரியத்துடன் எழுகிறது. அப்பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது. 


கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை: 


இந்த நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற இருப்பதால் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


இது தவிர கொடைக்கானலில் அடர்ந்த பனிமூட்டத்துடன் நேற்று காலை தொடங்கிய கனமழை தற்போது வரை சாரல் மழையாக நீடித்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு: 


காரைக்குடியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பட்டய தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்