4 ஆண்டுகளுக்கு பிறகு பிப். 2 முதல்.. சென்னை-ஹாங்காங் நேரடி விமான சேவை தொடக்கம்!

Meenakshi
Jan 29, 2024,12:08 PM IST

சென்னை: 4 ஆண்டுகளுக்கு  பிறகு சென்னை- ஹாங்காங் இடையே வருகிற பிப்ரவரி 2ம் தேதி முதல் நேரடி  விமான சேவை தொடக்கப்பட உள்ளது.


கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஹாங்காங் நேரடி விமான சேவை நான்காண்டுகளுக்கு பின் மீண்டும் துவங்கப்பட உள்ளது என அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து போனது. ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் உள்ள தொடர்பு முற்றிலும் தூண்டிக்கப்பட்டது. இதனால் உலகளவில் பொருளாதார நிலைகுலைந்தது. உலகளவில் செயல்பட்டு வந்த விமான சேவைகளும் துண்டிக்கபட்டது. 


சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கில் இருக்கும் பசிபிக் ஏர்லைன் விமான நிறுவனம் மூலம் நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று ஊரடங்கு சமயத்தில் சென்னையில் இருந்து உலகம் முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் துவங்கப்பட்டது. ஒரு சில நாடுகளுக்கு  மட்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படாமல் இருந்து வந்தன.




இந்த நிலையில் சென்னையில் இருந்து சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு ஹாங்காங் விமான நிலையம் இணைப்பு விமான நிலையமாக இருப்பதால் அங்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. பெரும்பாலான பயணிகள் இந்த விமான சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரும்  பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்கப்பட உள்ளது. பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு தனது நேரடி விமான சேவையை துவங்க உள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 


அதேபோல சென்னை- மொரீஷியஸ் இடையே ஏர் மொரீஷியஸ் ஏர்லைன் விமான சேவையும்  வரும் ஏப்ரல் மாதம் முதல்  மீண்டும் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையினால் தொழில் துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.