போலீஸ் ஆக முடியாட்டி என்னா.. அதுதான் ஊர்க்காவல் படை இருக்கே.. சூப்பர் ஆஃபர்!

Su.tha Arivalagan
Aug 30, 2023,12:41 PM IST
சென்னை: சென்னை காவல்துறைக்கு உதவி செய்ய ஒரு சூப்பரான வாய்ப்பு வந்திருக்கு.. போலீஸ் கனவுகளுடன் இருந்து அது நிறைவேறாமல் போனவர்களுக்கு இது நல்ல சான்ஸ்.

சென்னை பெருநகர மாநக காவல்துறைக்கு உதவுவதற்காக ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் எடுக்கவுள்ளனர். இதற்கு கல்வித் தகுதி பெரிதாக எதுவும் இல்லைங்க.. பத்தாவது படிச்சிருந்தா போதும். பாஸ் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 50 வரை. விண்ணப்பம் செய்யும் நபருக்கு எந்த குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது. அவர் மீது வழக்கு எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது.  விண்ணப்பிப்பவர்கள் சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் . குறிப்பாக ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவருக்கு 45 நாளுக்கு ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இந்த பணிக்கான சீருடை, ஷூ, தொப்பி போன்றவற்றை ஊர்க்காவல் படையே வழங்கும். தேர்வு செய்யப்படுபவர்கள் அவர்கள் சார்ந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 

தேர்வு செய்யப்படுவோர் போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதேபோல பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். பெண்களுக்கு இரவு ரோந்துப் பணி இருக்காது. இந்த பணியில் சேர்பவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூபாய் 560 வழங்கப்படும்.

இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு முதலமைச்சர் பதக்கம் மற்றும் குடியரசுத் தலைவர் பதக்கம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.  இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  கடைசி தேதி ஆகஸ்ட் 31 மாலை 5 மணி வரை. மேலும் தகவல் அறியவிரும்புவோர் 044-23452441, 23452442 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.